உத்தரப் பிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக பாலியல் மிரட்டல் விடுத்த சாமியாரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கைராபாத் பகுதியைச் சேர்ந்தவர் மகந்த் பஜ்ரங் தாஸ். சாமியாரான இவர் அப்பகுதியில் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் ஏப்ரல் 2ஆம் தேதி சீத்தாப்பூர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று ஊர்வலமாக சென்றபோது, வழியில் மசூதி அருகே தனது வாகனத்தை நிறுத்தி பேசியுள்ளார். அங்கு அவர் இஸ்லாமிய பெண்களை அச்சுறுத்தும் விதமாக வெறுப்பு பேச்சு மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இவர் பேசியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவியது. அதில், எந்த இஸ்லாமிய ஆண்களும் இந்து பெண்களை குறிவைத்து நடந்துகொண்டால், நான் இஸ்லாமிய பெண்களை கடத்தி பொது இடத்தில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்வேன் என பஜ்ரங் தாஸ் பேசுவதாக பதிவாகியுள்ளது.
இவரின் இப்பேச்சுக்கு அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டி, ஆராவாரம் எழுப்பி, ஜெய் ஸ்ரீராம் என கோஷம் எழுப்புகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவிவரும் நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பெண்கள் ஆணையம் உத்தரப் பிரதேச டிஜிபி ராகேஷ் சர்மாவுக்கு கடிதம் எழுதியது.
இதையும் படிங்க - டெல்லியில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு!
அதில், இந்துக்கள் இஸ்லாமியர்கள் என யாராக இருந்தாலும், பெண்களைக் குறிவைத்தே இதுபோன்ற அச்சுறுத்தல் உருவாகிறது. எனவே, காவல்துறை மௌனமாக வேடிக்கை பார்க்காமல் இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, உத்தரப் பிரதேச காவல்துறை இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தது. இந்நபர் மீது எஃப்ஐஆர் பதியப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று சாமியார் பஜ்ரங் முனி தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.