உத்தரப் பிரதேசத்தில் மனைவியின் நினைவாக மினி தாஜ்மஹாலை கட்டியவர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்ஷாஹர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஃபைசுல் ஹாசன் காத்ரி (83). தபால் நிலைய அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர், தனது மனைவி தாஜா முள்ளி பீவி மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்தார். 1953-இல் இவர்களது திருமணம் நடைபெற்றது.
2012-ல் தாஜா முள்ளி மரணமடைந்தார். இதையடுத்து, ஃபைசுல் ஹாசன் தனது மனைவியின் நினைவாக மினி தாஜ்மஹாலை கட்ட முடிவு செய்தார். பின்னர், தனது சேமிப்பைக் கொண்டு கட்டுமானத்தைத் தொடங்கினார்.
இதுகுறித்த செய்தி அறிந்த அப்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், ஃபைசுல் ஹாசனை லக்னோவுக்கு வரவழைத்து மினி தாஜ்மஹால் கட்டுமானப் பணிக்கு நிதியுதவி அளிப்பதாக தெரிவித்தார்.
அதை ஏற்க மறுத்த ஃபைசுல், அதற்கு பதிலாக தனது கிராமத்தில் மகளிர் கல்லூரி கட்டுமாறு முதல்வரைக் கேட்டுக்கொண்டார். மேலும் அக்கல்லூரியைக் கட்டுவதற்காக தனது சொந்த நிலத்தின் ஒரு பகுதியையும் அவர் தானமாக வழங்கினார். தற்போது அந்தக் கல்லூரியில் ஏராளமானோர் படித்து வருகின்றனர்.
தாஜ்மகால் கட்டுமானப் பணியில் ஃபைசுல் ஹாசனின் சேமிப்பு கரைய தொடங்கியது. கடந்த வியாழக்கிழமை கேசர் காலன் என்னும் இடத்தில் நடந்த சாலைவிபத்தில் ஃபைசுல் ஹாசன் பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறியதாவது: மினி தாஜ்மஹாலில் மார்பிள் கற்களை பதிப்பதற்காக ஃபைசுல் ஹாசன் ரூ.2 லட்சத்தை சேர்த்து வைத்திருந்தார். அதைக் கட்டி முடிக்கும் முன்பே அவர் உயிரிழந்துவிட்டார்.
தாஜ்மஹாலில் மும்தாஜின் கல்லறை அருகே ஷாஜகானின் கல்லறை அமைக்கப்பட்டதைப் போல், இந்த மினி தாஜ்மஹாலில் ஃபைசுல் ஹாசனின் உடலை அவரது மனைவியின் கல்லறை அருகே புதைக்க திட்டமிட்டுள்ளோம். விரைவில் இந்த தாஜ்மஹால் பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
Also watch
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mini Taj mahal, Uttar pradesh