• HOME
 • »
 • NEWS
 • »
 • national
 • »
 • தவறான பாலியல் குற்றச்சாட்டினால் 20 ஆண்டுகள் சிறையில் கழித்தவர் விடுதலை- வாழ்க்கையைத் தொலைத்தவர் கையில் கொப்புளங்களும் வெறும் ரூ.600-ம் தான் மிச்சம்

தவறான பாலியல் குற்றச்சாட்டினால் 20 ஆண்டுகள் சிறையில் கழித்தவர் விடுதலை- வாழ்க்கையைத் தொலைத்தவர் கையில் கொப்புளங்களும் வெறும் ரூ.600-ம் தான் மிச்சம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

20 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி கிடைத்தாலும் வெளியே வந்த திவாரி திக்குத் தெரியாத இடத்தில் தள்ளிவிடப்பட்டது போல்தான் இருக்கிறார்.

 • Share this:

  பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு 20 ஆண்டுகள் சிறையில் தண்டனையைக் கழித்த விஷ்ணு திவாரி என்ற கைதி இப்போது நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்துள்ளார். அவரிடம் வெறும் 600 ரூபாய்கள் மட்டுமே கையிருப்பு உள்ளது.

  23 வயதில் ஜெயிலுக்குப் போனவர் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை உட்பட எஸ்.சி/எஸ்டி வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழும் தண்டனை பெற்று ஏககாலத்தில் இந்தத் தண்டனைகளை அனுபவிக்க கோர்ட் உத்தரவிட்டது. இப்போது விஷ்ணு திவாரிக்கு வயது 43. செப்டம்பர் 16, 2000 ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டார்.

  இவர் விடுதலையாகி நேற்று இரவு லலித்பூர் மாவட்டத்தில் உள்ள தன் கிராமத்துக்கு பேருந்தில் புறப்பட்டார்.

  முதலில் லலித்பூர் நீதிமன்றம் இவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. பிறகு எஸ்.சி/எஸ்டி வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை பெற்றார். தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை இவர் பாலியல் பலாத்காரம் செய்தார் என்பதுதான் இவர் மீதான குற்றச்சாட்டு. வயலில் வேலை செய்து விட்டு வரும்போது தன்னை தாக்கி தன்னை வன்புணர்ச்சி செய்ததாக அந்தப் பெண் புகார் அளித்தார்.

  இந்நிலையில் திவாரி சிறையிலிருந்து வெளியே வரும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானது. இவனை வரவேற்க ஒருவரும் வரவில்லை.
  விடுதலையாகி வெளியே வந்த விஷ்ணு திவாரி.


  இவர் என்.டி.டிவிக்குக் கூறும்போது, “20 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டேன். நான் என்னத்த எதிர்காலத்தப் பார்க்கிறது. ஜெயிலில் கடினமான வேலைகள் செய்து என் உடம்பே உடைந்து விட்டது, என் குடும்பமும் உடைந்து விட்டது. இளம் சகோதரர் மட்டும் இருக்கிறார். எனக்குத் திருமணம் ஆகவில்லை. கையைப் பாருங்கள், ஜெயில் சமையலறையில் வேலை செய்து கையெல்லாம் கொப்புளங்கள். சிறை நிர்வாகம் நான் வேலை செய்ததற்கான கூலியாக 600 ரூபாய் கொடுத்தார்கள், இவ்வளவுதான் என்னிடம் இருக்கிறது, இதை வைத்துக் கொண்டு என்ன செய்வது” என்றார்.

  ஜனவரி மாதம் இவரை அலஹாபாத் கோர்ட் குற்றத்திலிருந்து விடுவித்த போது, “மருத்துவ ஆதாரத்தில் பலாத்காரம் செய்ததற்கான குறைந்த பட்ச அடையாளம் கூட இல்லை அரசு தரப்பு வாதங்கள், சாட்சிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை இவர் வாயைப்பொத்தி தரையில் வேகமாகத் தள்ளியதாக கூறப்பட்டாலும் அந்தப் பெண் மீது காயம் இருந்திருக்க வேண்டும்.

  எங்கள் மருத்துவ ஆதாரங்களின்படி விந்து இருந்ததற்கான ஆதாரமும் இல்லை. பலாத்காரம் நடக்கவில்லை என்று மருத்துவர்கள் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றனர். பெண்ணின் உடல் பாகங்கள் எதிலும் காயமில்லை, பின் எப்படி பலாத்காரம் நடந்திருக்க முடியும்?

  மேலும் 3 சாட்சியங்களின் விசாரணைகளையும் குறுக்கு விசாரணைகளையும் பார்த்ததில் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கின்றன. எனவே குற்றம்சாட்டப்பட்டவர் தவறாக குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். எனவே குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்படுகிறார்.

  மேலும் நீதிபதி கூறிய போது இவரது ஆயுள் தண்டனையைக் குறைக்க வாய்ப்பிருந்தும் மாநில அரசு குறைக்கவில்லை என்பது எங்களுக்கு வேதனை அளிக்கிறது” என்று கூறினர்.

  20 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி கிடைத்தாலும் வெளியே வந்த திவாரி திக்குத் தெரியாத இடத்தில் தள்ளிவிடப்பட்டது போல்தான் இருக்கிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: