உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை ஊழியர் ஒருவர் நோயாளிக்கு ரத்தத்திற்கு பதிலாக சிவப்பு நிற மருந்தை கலந்து ஏற்றிய அதிர்ச்சிக்குரிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் மஹோபா மாவட்டத்தின் பாந்த்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் 65 வயதான ராம்குமாரி. கணவரை இழந்த இவர் தனது மகன் ஜுகல் கிஷோருடன் வசித்து வருகிறார். இவரது மகனுக்கு மே 23ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மகனின் சிகிச்சைக்கு ரத்தம் செலுத்த வேண்டும் என மருத்துவர் கூறியுள்ள நிலையில், அங்கு பணியாற்றும் ராஜ்குமாரி என்ற பெண் சுகாதாரத்துறை ஊழியர் ரத்தம் ஏற்பாடு செய்ய ரூ.5,000 லஞ்சம் வழங்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதையடுத்து தாயார் ராம்குமாரி தனது நகையை விற்று ரூ.5,000 ஏற்பாடு செய்து அந்த ஊழியரிடம் தந்துள்ளார்.
ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட அந்த ஊழியர், ரத்தத்திற்கு பதிலாக சிவப்பு நிற மருந்துடன் குல்கோஸை கலந்து ரத்தம் போல ஏற்றியுள்ளார். தவறான ரத்தம் மகன் ஜுகலுக்கு ஏற்றப்பட்ட உடனே அவரின் உடல்நிலை மேலும் மோசமடைய தொடங்கியுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த தாயார் ராம்குமாரி புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து புகாருக்குள்ளான ஊழியர் இடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:
கணவருடன் உறவில் இருந்த பெண்ணை பழிவாங்க மனைவி செய்த விபரீத செயல்
அவர் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இதற்காக மூன்று நபர் விசாரணை கமிஷன் ஒன்றை மாவட்ட தலைமை மருத்துவ அலுவலர் நியமித்துள்ளார். இதையடுத்து ஜுகல் கிஷோர் மேற்படி சிகிச்சைக்காக வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.