வாரணாசி - கோரக்பூர் இடையே கடல் விமான சேவையை துவக்க வேண்டும்- மத்திய அரசிடம் உத்தரப் பிரதேச அரசு கோரிக்கை

மாதிரிப் படம்

வாரணாசி - கோரக்பூர் இடையே கடல் விமான சேவையை துவக்க மத்திய அரசிடம் உத்தரப் பிரதேசம் கோரிக்கைவைத்துள்ளது.

 • Share this:
  வாரணாசி மற்றும் கோரக்பூருக்கு இடையே மாநிலத்தின் முதல் கடல் விமான சேவையை (Seaplane Service) துவக்க யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு திட்டமிட்டு இருக்கிறது. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, வாரணாசி மற்றும் கோரக்பூருக்கு இடையே கடல் விமான சேவையை துவங்க கோரி மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறது. தங்களது மாநிலத்தில் முதல் முறையாக கடல் விமான சேவையை துவங்குவது பற்றி சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ள உபி அரசு, இந்த சேவையை துவங்குவதற்கு தேவையான சாத்தியக்கூறு ஆய்வுகளை நடத்தவும் தொடர்ந்து இவ்விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசை கேட்டு கொண்டு உள்ளது.

  இதனிடையே கடந்த 3 நாட்களுக்கு முன்பு உத்தரபிரதேச மாநில சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நந்த் கோபால் குப்தா நந்தி (Nand Gopal Gupta Nandi ), மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவை தலைநகர் டெல்லியில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது வாரணாசி-கோரக்பூர் விமானப் பாதையில் கடல் விமான சேவையைத் தொடங்குவது குறித்து இருவரும் விவாதித்து உள்ளனர். தவிர விமானப் போக்குவரத்து தொடர்பான இதர சில விவகாரங்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்தும் இவர்கள் இருவரும் விவாதித்தனர்.

  மேலும் இந்த சந்திப்பின் போது உத்தரபிரதேச மாநில அமைச்சர் நந்த் கோபால் குப்தா நந்தி, சில வாரங்களுக்கு முன் தங்கள் மாநிலம் மத்திய அரசுக்கு அனுப்பிய வாரணாசி-கோரக்பூர் கடல் விமான சேவை திட்டம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க ஜோதிராதித்ய சிந்தியாவிடம் கோரிக்கை விடுத்தார். மேலும், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் துரிதப்படுத்தப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உத்தரப் பிரதேச அரசால் ஒரு சிறிய அறிக்கை கொடுக்கப்பட்டது. உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் பற்றிய முழு விவரங்களும் அதில் அடங்கி இருந்தது.

  மேலும் இந்த சந்திப்பின் போது பிராந்திய இணைப்பு திட்டத்தின் கீழ் (REGIONAL CONNECTIVITY SCHEME) கட்டப்பட்டுள்ள மொராதாபாத், அலிகார், அசம்கர் மற்றும் ஷ்ரவஸ்தி உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு விரைவில் லைசென்ஸ் வழங்குமாறு நந்த் குமார் குப்தா நந்தி, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். மேற்கண்ட 4 விமான நிலையங்களில் 99 % பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், லைசென்ஸ் வழங்கப்பட்டவுடன் விமான சேவைகளை தொடங்க உத்தரபிரதேச அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சரிடம் அவர் குறிப்பிட்டார்.

  முன்னதாக கடந்த ஜூனில், புதிய நீர் ஏரோட்ரோம்களின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதன் மூலமும், புதிய கடல் விமான வழித்தடங்களின் செயல்பாட்டை விரைவுபடுத்துவதன் மூலமும் நாட்டில் கடல் விமான சேவைகளை உருவாக்க உளளதாக மத்திய அரசு கூறியது. இதற்காக துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி சிவில் ஏவியேஷன் மற்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் அடையாளம் காணப்படும் அல்லது பரிந்துரைக்கப்படும் கடல் விமான வழித்தடங்களை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கடல் விமானங்களால் நிலம் மற்றும் நீர் என இரண்டு பரப்பிலிருந்தும் செயல்பட முடியும். பறப்பது மற்றும் தரையிறங்குவதையும் 300 மீட்டர் நீளமுள்ள நீர்த்தேக்கத்திலிருந்து இவற்றின் மூலம் செய்யலாம். சுமார் 111 ஆறுகளை விமான ஓடுபாதையாக பயன்படுத்தி நாட்டில் 100 கடல் விமான சேவைகளை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  Published by:Karthick S
  First published: