டியூஷனிலிருந்து வீட்டுக்கு திரும்பிய 10ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கும்பல்!

டியூஷனிலிருந்து வீட்டுக்கு திரும்பிய 10ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கும்பல்!

கூட்டு பாலியல் வன்புணர்வு

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் டியூஷனிலிருந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த 10ம் வகுப்பு மாணவியை 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் சர்தனா பகுதி அருகில் உள்ள கப்சத் கிராமத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவர் பொதுத்தேர்வுக்கு தயாராகும் வகையில் தனது வீட்டின் அருகேயுள்ள டியூஷன் ஒன்றுக்கு தினமும் சென்று வந்துள்ளார்.

கடந்த வியாழன் அன்று மதியம் 3.30 மணியளவில் தனது வீட்டிலிருந்து ஒரு கிமீட்டர் தூரத்தில் உள்ள டியூஷனுக்கு வழக்கம் போல புறப்பட்டு சென்றவர் பின்னர் மாலை 5.30 மணியளவில் தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் மாணவியை கடத்திச் சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

அங்கிருந்து தனது வீட்டிற்கு மிகவும் அலங்கோலமான நிலையில் திரும்பிய 10ம் வகுப்பு மாணவி, நடந்தவற்றை தனது பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். இதன் பின்னர் அவர் மயங்கி விழுந்ததால் மோதிபுரம் பகுதியில் உள்ள SDM Global மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே மாணவியின் சகோதரர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது சகோதரியை பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் கடத்தி, கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து விஷம் அளித்து கொலை செய்துள்ளதாக தனது புகாரில் கூறியுள்ளார்.

இருப்பினும், சிறுமி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாகவும், தன்னை பாலியல் வன்புணர்வு செய்த 4 பேரது பெயர்களையும் அதில் அவர் எழுதி வைத்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த புகாரின் அடிப்படையில் சிறுமி குறிப்பிட்டிருந்ததாக கூறப்படும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த லக்கான், விகாஸ் ஆகிய இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.. தலைமறைவாக இருந்து வரும் மேலும் இரண்டு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தையே அதிர வைத்துள்ள மாணவியின் கூட்டு பாலியல் சம்பவம் தொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் கேஷவ் குமார் கூறுகையில், மாணவியின் புத்தகத்தில் அவர் எழுதி வைத்திருந்த ஒரு பேப்பரை நாங்கள் கைப்பற்றியிருக்கிறோம். அதில் குற்றவாளிகளின் பெயர்களை அவர் எழுதி வைத்திருக்கிறார். இது மாணவியின் கையெழுத்து தானா என்பதையும் அவரின் பெற்றோரிடம் விசாரித்து உறுதிப் படுத்தியுள்ளோம். மாணவியின் உடற்கூராய்வு அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அதே போல மாணவியின் புத்தகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பேப்பரையும் ஆய்வுக்காக தடய அறிவியல் துறைக்கு அனுப்பி வைத்துள்ளோம். விரைவில் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.
Published by:Arun
First published: