உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் யோகி ஆதித்யநாத் தனது தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்யாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி முதல், மார்ச் 7-ம் தேதி வரை தேர்தல் நடைபெற்றது. 5 மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு பெரிதும் எழுந்தது. இதில், குறிப்பாக உத்தரபிரதேசம், பஞ்சாப் மாநில தேர்தல் முடிவுகள் மீது பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்தன. நாட்டின் மிகப் பெரிய தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தில், மீண்டும் ஆட்சியை தக்கவைக்க யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக முனைப்பு காட்டியது.
இந்நிலையில், 5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. தொடக்கத்திலிருந்தே உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை வகிக்க துவங்கியது.
இதையும் படிங்க - பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வி!
அங்கு ஆட்சியைப் பிடிக்க 202 தொகுதிகள் தேவை என்ற நிலையில், ஆளும் பாஜக 270க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. அதைத்தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சி 120க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. இதனால் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாஜக அரசு தான் மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறியிருந்ததை உறுதி செய்யும் வகையிலேயே தேர்தல் முடிவுகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், முதல்வர் வேட்பாளரான யோகி ஆதித்யநாத், தான் நின்ற கோரக்பூர் தொகுதியில் 92,844 வாக்குகள் பெற்றிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
யோகி ஆதித்யநாத் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி வேட்பாளர் சபாவதி சுக்லாவைக் காட்டிலும் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கோராக்பூர் தொகுதியில் மொத்த வாக்குகள் 1,50,934 என்றிருந்த நிலையில், அதில் 64.29% பேர் யோகி ஆதித்யநாத்துக்கு வாக்களித்துள்ளனர்.
தொடர்ந்து, உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு அடுத்து, 120க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியுள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சி எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.