அகிலேஷ் யாதவுக்கு தலித்கள் தேவையில்லை எனவும் சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணியில் இணைய இயலவில்லை என பிரபல பட்டியலின தலைவர் கூறியிருப்பது உத்தரப் பிரதேச அரசியலை பரபரப்பாக்கி இருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெறவிருக்கும் நிலையில் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் அங்கம் வகித்த 3 அமைச்சர்கள் மற்றும் 7 எம்.எல்.ஏக்கள் என முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் இருந்து விலகி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்து வந்தனர். இது ஆளும் பாஜகவுக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அகிலேஷ் யாதவ், பாஜகவுக்கு கடுமையான சவால் அளித்து வந்த நிலையில், பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்து வரும் இளம் பட்டியலின தலைவரின் பேச்சு தற்போது அகிலேஷுக்கு பின்னடைவு ஏற்படும் வகையில் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.
Also read:
கங்கனா ரணாவத்தின் கன்னத்தை விட மென்மையான சாலைகள் அமைப்பேன் என உறுதி கூறிய காங்கிரஸ் எம்.எல்.ஏ - சர்ச்சை வீடியோ
சமாஜ்வாதி கட்சியில் சிறிய கட்சிகள் இணைந்து வருகின்றன. சமீபத்தில் கூட கூட்டணி கட்சியின் தலைவர்களை அவர் சந்தித்து கூட்டணிக்கான இடங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தலித்களுக்கான கல்வி மேம்பாட்டுக்காக தொடங்கப்பட்ட பீம் ஆர்மியின் நிறுவனர்களுள் ஒருவரான 35 வயதாகும் சந்திரசேகர் ஆசாத்தின், ஆசாத் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் கூட்டணியில் இணைவதாக கூறப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தையும் சில நாட்களாக நடத்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது அகிலேஷ் யாதவின் கூட்டணியில் தங்கள் கட்சி இணையப்போவதில்லை என சந்திரசேகர் ஆசாத் அறிவித்துள்ளார். மேலும் அகிலேஷ் குறித்து அவர் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also read:
ஒரே ரன்வேயில் 2 இந்திய விமானங்கள்.. நூலிழையில் விபரீதம் தவிர்ப்பு - துபாய் விமான நிலையத்தில் திக் திக்..
செய்தியாளர் சந்திப்பில் பேசிய சந்திரசேகர் ஆசாத், அகிலேஷ் யாதவ் தன்னை அவமதித்துவிட்டதாக கூறினார்.
அவர் பேசுகையில், “பாஜக மீண்டும் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக அகிலேஷ் கூட்டணியில் இணைய விரும்பினேன். பாஜகவுக்கு எதிராக வலிமையான கூட்டணியை உருவாக்கும் விதமாக மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் தலித் அமைப்புகளை ஒன்றிணைத்து கடந்த 6 மாதங்களாக அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன். லக்னோவுக்கு வந்து இரண்டு நாட்கள் காத்திருந்தேன், ஆனால் அவர் என்னை அழைக்கவில்லை.
அகிலேஷ் யாதவ் "சமூக நீதியை" புரிந்து கொள்ள முடியாமல் தலித்துகள் தொடர்பான விஷயங்களில் மவுனம் காத்தார். அகிலேஷுக்கு தலித் தலைவர்கள் தேவையில்லை, அவருக்கு தலித் வாக்குகள் மட்டுமே தேவையாக இருக்கிறது. அடுத்தகட்டமாக பிரிந்து கிடக்கும் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க முயல்வேன். அப்படிப்பட்ட கட்சிகளை ஒன்றிணைத்து வரும் தேர்தலை எதிர்கொள்ள முயல்வேன். அப்படியில்லை என்றால் சமூக நீதி காக்க நானே தனியாக போராடுவேன்.” இவ்வாறு சந்திரசேகர் ஆசாத் கூறினார்.
Also read: ‘
என்ன வச்சு காமெடி பன்னிட்டாங்க..’ தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கதறி அழுத அரசியல் கட்சி பிரமுகர்!
சந்திரசேகர் ஆசாத் கட்சி 10 தொகுதிகள் கேட்டதாகவும், அகிலேஷ் 3 மட்டுமே தருவதாகவும் கூறியதாக தெரிகிறது. தொகுதி பங்கீடுவிவகாரத்தால் இவ்விரு கட்சிகளும் தற்போது கூட்டணி சேர இயலாமல் போயிருக்கிறது. தொகுதிப் பங்கீடு இறுதி ஆகியிருந்தால், இன்று மதியம் 12.30 மணியளவில் அகிலேஷ் மற்றும் சந்திரசேகர் ஆசாத் இருவரும் ஒன்றாக சேர்ந்து செய்தியாளர்களை சந்திப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.