உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று அமைதியாக நடந்து முடிந்தது. மொத்தம் 58 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட வாக்குப்பதிவில் 60.17 சதவீத வாக்குகள் பதிவாகின.
சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபாட் எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக புகார்கள் வந்ததாகவும், இவை உடனடியாக சரி செய்யப்பட்டதாகவும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அஜய் குமார் சுக்லா கூறியுள்ளார்.
காலை 7 மணிக்கு தொடங்டிகிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. சில இடங்களில் வாக்காளர்கள் இருந்ததன் காரணமாக நேர நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்த 58 தொகுதிகளில் 623 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.
இதையும் படிங்க -
தெருவாசிகளை காப்பாற்ற பாம்புடன் போராடி இறந்த நாய்!
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் நொய்டா தொகுதியில் போட்டியிடுகிறார். இதேபோன்று முன்னாள் உத்தரகாண்ட் கவர்னர் ராணி மவுரியா ஆக்ரா நகர்ப்புற தொகுதியில் போட்டியிடுகிறார்.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக இன்று உத்தரப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு நடந்துள்ளது. இங்கு மட்டும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. மார்ச் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க -
வெளிநாட்டு பயணிகளுக்கான பாதுகாப்பு வழிமுறைகளில் மாற்றம்: மத்திய அரசு அறிவிப்பு
இன்று வாக்குப்பதிவு நடந்த 58 தொகுதிகளில் கடந்த 2017-ல் நடந்த தேர்தலின்போது பாஜக 91 சதவீத இடங்களில் வெற்றி பெற்றது. அதேநேரம், தற்போது விவசாயிகள் பிரச்னை வெடித்திருப்பதால் இந்த முறையும் பாஜக அதிக இடங்களை கைப்பற்றுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கொரோனா பாதிப்பை உத்தரப்பிரதேச அரசு சரியாக கையாளவில்லை என்கிற புகார் உள்ளது. குறிப்பாக கங்கை ஆற்றில் மிதந்த பிணங்கள் தொடர்பான படங்கள், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. 5 ஆண்டுகள் யோகி ஆதித்யநாத் ஆட்சியின் ரிப்போர்ட் கார்டாக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது. அடுத்த கட்ட வாக்குப்பதிவு வரும் 14-ம்தேதி நடைபெறவுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.