சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் முதல் முறையாக பெண் ஒருவருக்கு தூக்கு தண்டனை!

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் முதல் முறையாக பெண் ஒருவருக்கு தூக்கு தண்டனை!

தூக்கு தண்டனை

இந்நிலையில் 2008ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதியன்று சலீமுடன் சேர்ந்து ஷப்னம் அவரின் தந்தை, தாய், 10 மாதமே ஆன அண்ணன் மகன் உள்ளிட்ட தன் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை கோடாரியால் வெட்டிப் படுகொலை செய்தார்.

  • Share this:
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் முதல் முறையாக பெண் கைதி ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு மதுரா சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
முறையற்ற உறவு வைத்த நபருடன் இணைந்து தன் குடும்பத்தினரையே கொலை செய்த குற்றத்திற்காக அப்பெண்ணுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில் உள்ள பவன்கேதா எனும் கிராமத்தை சேர்ந்தவர் சவுகத் அலி, பள்ளி ஆசிரியரான இவரின் மகள் தான் ஷப்னம். வரலாறு மற்றும் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவரான ஷப்னம், சலீம் என்ற படிக்காத கூலித் தொழிலாளி ஒருவருடன்
முறையற்ற உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 2008ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதியன்று சலீமுடன் சேர்ந்து ஷப்னம் அவரின் தந்தை, தாய், 10 மாதமே ஆன அண்ணன் மகன் உள்ளிட்ட தன் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை கோடாரியால் வெட்டிப் படுகொலை செய்தார். இந்த வழக்கில் சலீம் மற்றும் ஷப்னம் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
தங்கள் உறவுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக இந்த படுகொலைகளை இருவரும் அரங்கேற்றியதாக தெரியவந்தது. அப்ரூவரான சலீம் கொலைக்கு பயன்படுத்திய கோடாரி இருக்கும் இடத்தை காட்டினார். ஷப்னம் உணவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். அதனை உட்கொண்ட குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மயக்கம் அடைந்தனர். இதன் பிறகே கோடரியால் ஷப்னம் அனைவரையும் துடிதுடிக்க வெட்டி படுகொலை செய்துள்ளார்.

இந்த வழக்கில் ஷப்னத்திற்கு தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டது. பின்னர் உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் இந்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஷப்னத்திற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக பெண் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக லக்னோவைச் சேர்ந்த ராம்ஸ்ரீ என்பவருக்கு ஏப்ரல் 8, 1998ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும் சிறையிலேயே அவருக்கு குழந்தை பிறந்ததால் கடைசி நேரத்தில் தூக்கு தண்டனை நிறுத்தப்பட்டு, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

மதுராவில் உள்ள சிறைச்சாலையில் ஷப்னத்திற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. வாரண்ட் பிறப்பிக்கப்படாததால் ஷப்னம் எப்போது தூக்கிலிடப்படுவார் என்பது உறுதியாகவில்லை. இங்குள்ள பெண்களுக்கான தூக்கு தண்டனை மேடை 150 ஆண்டுகள் பழமையானது. நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் இதுவரை எந்த ஒரு பெண்ணுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாததால் அந்த மேடை தற்போது புணரமைக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே ஷப்னத்திற்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான பணிகளில் சிறைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தூக்கு கயிறு பீகாரின் பக்ஸர் மாவட்டத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுவிட்டதாக சிறைத்துறையினர் தெரிவித்தனர்.
Published by:Arun
First published: