மத்திய அரசின் திறமையின்மையால் சொல்லொணா துயர் அனுபவித்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ‘திட்டமிடா’ லாக்டவுன் குறித்து ராகுல் காந்தி வேதனை

ராகுல் காந்தி

வைரஸ் காரணமல்லாத மரணம் 884, இதில் 335 பேர் புலம்பெயர் தொழிலாளர்கள் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா 2020 ஜூலை 3ம் தேதி வெளியிட்ட கட்டுரையில் கூறுகிறது.

 • Share this:
  கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு கொண்டு வந்த லாக்டவுன் சரியாகத் திட்டமிடப்படாமல் ஏற்படுத்திய பேரழிவின் அச்சங்களிலிருந்து மக்கள் இன்னமும் விடுபடவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

  லட்சக்கணக்கான குடும்பங்கள் வலியிலும் வாதையிலும் உழன்று வருகின்றன. அரசின் திறமையின்மையும் தொலைநோக்கின்மையும்தான் இந்த அவதிக்குக் காரணம் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.

  கடந்த ஆண்டு மார்ச் 24ம் தேதி மத்திய அரசு லாக் டவுன் உத்தரவுப் பிறப்பித்தது. இதனால் ஏழை மக்களும் புலம்பெயர் தொழிலாளர்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு சிலர் உயிரிழக்கவும் செய்தனர்.

  இதற்கு பலதரப்புகளிலிருந்தும் கண்டனங்கள் குவிந்தன. ஆனால் மத்திய அரசிடம் எத்தனை புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்தார்கள் என்ற புள்ளி விவரம் கூட இல்லை, இதனை பாஜக அமைச்சரே மக்களவையில் தெரிவித்த கொடுமையும் கடும் விமர்சனங்களுக்குள்ளானது.

  சுமார் 12 கோடி பேர் வேலையிழந்ததாகக் கூறப்படுகிறது, பொருளாதாரம் சரிவு கண்டு வேலை வாய்ப்பின்மை, வறுமை, பட்டினிச்சாவுகள் அதிகரித்ததாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

  பல ஏழை மக்களுக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் துர்சொப்பனமாக அமைந்தது. லாக்டவுன் காரணமாக சுமார் 900 பேர் இறந்து போனதாக சில புள்ளி விவரங்கள் கூறுகின்றன. சாலையில் நடந்து சென்றதில் வெயில், மற்றும் விபத்துகளினால் மட்டும் 209 பேர் மரணித்துள்ளனர். வறும மற்றும் நிதி நெருக்கடிகளினால் 167 பேர் இறந்துள்ளனர். 125 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும், ஷ்ரமிக் ரயில்களில் 95 பேர் மரணித்ததாகவும் எந்த வகையிலும் சேராத 60 பேரும் மரணித்துள்ளனர்.

  வைரஸ் காரணமல்லாத மரணம் 884, இதில் 335 பேர் புலம்பெயர் தொழிலாளர்கள் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா 2020 ஜூலை 3ம் தேதி வெளியிட்ட கட்டுரையில் கூறுகிறது.

  இதனையடுத்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “திட்டமிடப்படாத லாக்டவுன் பேரழிவு இன்னமும் நாட்டை பயமுறுத்தி வருகிறது. அரசின் திறமையின்மையாலும் தொலைநோக்கின்மையாலும் வர்ணிக்க முடியாத வலியை அனுபவித்த லட்சக் கணக்கான குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
  Published by:Muthukumar
  First published: