பாலியல் வன்கொடுமை செய்தவர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட உன்னாவ் பெண் மரணம்

பாலியல் வன்கொடுமை செய்தவர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட உன்னாவ் பெண் மரணம்
News18
  • Share this:
உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்தவர்களால் மண்ணெண்ணெய் ஏற்றி எரிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலன் இன்றி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

உத்தரபிரதேசத்தின் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளம்பெண்ணின் காதலர் அவளை மணம் முடிப்பதாக கூறி உடல்ரீதியாக பயன்படுத்தியுள்ளார். ஆனால் திருமணம் செய்ய மறுத்ததுடன் அந்த பெண்ணை தனது நண்பனின் பாலியல் விருப்பத்திற்கும் உடன்பட கட்டாயப்படுத்தியுள்ளார். அவற்றை படம்பிடித்து வைத்து மிரட்டல் விடுத்த நிலையில் இருவர் மீதும் அந்த பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டு குற்றம்சாட்டப்பட்ட இருவரின் ஒருவர் கைதானார். மற்றொருவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. இவை நடந்தது கடந்த மார்ச் மாதத்தில். உன்னாவை அடுத்துள்ள ரே பரேலி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அதில் ஆஜராவதற்காக நேற்று அதிகாலையில் அந்த இளம் பெண் தனது கிராமத்தில் இருந்து தனியாக நடந்து சென்றுள்ளார்.அப்போது அவரை 5 பேர் வழிமறித்திருக்கிறார்கள். அதில் இந்த வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்தவரும், தேடப்பட்டு வந்தவரும் உண்டு. பெண்ணின் தலையில் அதில் ஒருவர் தாக்கியதோடுகழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். கதறித் துடித்த அந்த பெண் மீது மண்ணெண்ணெயை ஊற்றி 5 பேரும் தீ வைத்துள்ளனர். உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் அந்த பெண் அலறியபடி உதவி கேட்டு ஓடியுள்ளார்.

அவரைப் பார்த்த பக்கத்து கிராமத்தினர் சூனியக்காரி என நினைத்து பயந்துபோய் உதவி செய்யத் தயங்கியுள்ளனர். உடலில் தீக்காயங்களோடு ஒரு கையில் செல்போனும், மறு கையில் மணி பர்சுமாக ஒரு கிலோ மீட்டர் ஓடி வந்த நிலையில் விவசாயி ஒருவரும், அவரது மனைவியும் அந்த பெண்ணுக்கு உதவி செய்துள்ளனர். தீப்பற்றிய உடலில் போர்வை போர்த்தியதுடன் அவசர உதவி எண்ணுக்கு அழைத்து அந்த பெண் பேச உதவி செய்துள்ளனர்.அதன் விளைவாக உடனடியாக அவசர ஊர்தி மூலம் லக்னோவில் மருத்தவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் இளம் பெண். நேற்று மாலையில் லக்னோவில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்ட அந்த பெண் தற்போது சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடலில் 80 விழுக்காடு வரை தீக்காயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தன் மீது தீ வைத்ததாக அந்த பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 5 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு 11.10 மணியளவில் அந்த பெண்ணுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இரவு 11.40 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
First published: December 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading