உத்தரப்பிரதேசத்தில் தலித் சிறுமிகள் மரணம்: ஒரு தலைக் காதலால் நேர்ந்த விபரீதம்.. அம்பலமான உண்மைகள்!

உத்தரப்பிரதேசத்தில் தலித் சிறுமிகள் மரணம்: ஒரு தலைக் காதலால் நேர்ந்த விபரீதம்.. அம்பலமான உண்மைகள்!

உத்தரப்பிரதேசத்தில் தலித் சிறுமிகள் மரணம்

உன்னாவ் சிறுமிகள் உயிரிழந்த விவகாரத்தில் 25 வயதுடைய நபர் மற்றும் அவரின் உறவினரான மைனர் சிறுவன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

  • Share this:
கடந்த வாரம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய உத்தரப்பிரதேச தலித் சிறுமிகள் இருவர் மரணம் குறித்த வழக்கில் மைனர் சிறுவன் உட்பட இரண்டு குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் கால்நடைத் தீவனம் சேகரிக்கச் சென்ற 2 தலித் சிறுமிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். மற்றொரு சிறுமி உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கான்பூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 14, 15 மற்றும் 16 வயதுடைய இச்சிறுமிகள் விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்பது நிகழ்விட சாட்சியங்கள் மூலம் தெரியவந்தது. ஏனெனில் மரணமடைந்த மற்றும் உயிருக்கு போராடிய சிறுமிகள் வாயில் நுரை இருந்தது.

இந்த விவகாரம் அரசியல் ரீதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறி விட்டதாக ஆளும் யோகி ஆதித்யநாத் அரசின் மீது குற்றம் சுமத்தினர்.

இந்த நிலையில் உன்னாவ் சிறுமிகள் உயிரிழந்த விவகாரத்தில் 25 வயதுடைய நபர் மற்றும் அவரின் உறவினரான மைனர் சிறுவன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள 25 வயதுடைய இளைஞர், உயிர் தப்பிய சிறுமியிடம் ஒரு தலைக் காதலில் ஈடுபட்டிருந்ததும், அவர் தனது காதலை ஏற்காததால் அவரை விஷம் வைத்துக் கொல்லும் முயற்சியில் மற்ற இரு சிறுமிகள் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

கொரோனாவால் அமல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்க காலத்தில் அந்த வாலிபர் சிறுமிகள் ஆடு மேய்க்கும் பகுதியில் உள்ள தங்களுக்கு சொந்தமான தோட்டத்துக்கு அடிக்கடி வந்திருக்கிறார். இந்த வகையில் அந்த 16 வயது சிறுமியுடன் பழகியுள்ளார். அவர் தனது காதலை அச்சிறுமியிடம் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த போதெல்லாம் அச்சிறுமி மறுத்திருக்கிறார். இதனையடுத்து கடந்த பிப்ரவரி 14 அன்று காதலர் தினத்தில் மீண்டும் தனது விருப்பதை தெரிவிக்கவே மீண்டும் அச்சிறுமி மறுத்திருக்கிறார். இதனால் துவண்டு போன அந்த வாலிபர் அச்சிறுமியை கொல்ல திட்டமிட்டுள்ளார். இதற்கு அவரின் உறவினரான மைனர் சிறுவனும் உடந்தையாக இருந்துள்ளார்.

சம்பவ நாளில் சிப்ஸ் மற்றும் தண்ணீர் கேனில் பூச்சி கொல்லி மருந்தை கலந்து வைத்து அதனை 16 வயது சிறுமிக்கு அளித்துள்ளார். இதனை அச்சிறுமியும் அவரின் உறவினர்களான உடன் இருந்த மற்ற இரு சிறுமிகளும் உட் கொண்டனர். இதனையடுத்து சிறுமிகள் இருவரும் மயக்கமடைந்ததால் வாலிபரும் அந்த சிறுவனும் அங்கிருந்து தப்பியோடினர்.

இவர்கள் இருவரும் ஓடுவதை பார்த்தவர்கள் காவல்துறையினருக்கு விசாரணையின் போது தெரிவித்ததே இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டறிய காவல்துறையினருக்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்திருக்கிறது.

ஒரு வாரமாக பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: