உத்தர பிரதேசம் லக்கிம்பூர் விவகாரத்தில் மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கி லக்னோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்.3ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கார் மோதியதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மேலும் 4 பேர் உயிரிழந்தனர்.
இதில், காரை மோதச் செய்ததாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, இச்சம்பத்தில் ஆஷிஷ் மிஸ்ரா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என கோரிக்கைகள் வலுத்த போதிலும், தொடர்ந்து அவர் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பதவி வகித்து வருகிறார்.
Also Read: குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 என்னாச்சு.. உதயநிதியை நோக்கி பாய்ந்த கேள்வி
இதனிடையே, விவசாயிகளின் கோபத்தை புரிந்துகொண்ட மத்திய அரசு, கடந்த நவம்பர் மாதத்தில் வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதாக அறிவித்து, விவசாயிகளின் 11 மாத போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
அதன்பின்னர், இந்த விவகாரத்தில் நடைபெறும் விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார் ஜெயின் என்பவரை உச்சநீதிமன்றம் நியமித்தது. மேலும் 3 மூத்த போலீஸ் அதிகாரிகளையும் சிறப்பு புலனாய்வு குழுவுடன் சேர்த்தது.
இதனையடுத்து,லக்கிம்பூர் கெர்ரி விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் கார் நுழைந்தது மற்றும் வன்முறை சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி என்றும், மாறாக எதார்த்தமாக நடந்தவை அல்ல என்றும் இதனை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்தது.
இந்து நண்பர்கள் ஆதரவாக உள்ளனர், கல்வி தான் முக்கியம்.. கர்நாடக மாணவி
தொடர்ந்து, வழக்கு விசாரணைக்காக உத்தரப் பிரதேச சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் 5,000 பக்க குற்றப்பத்திரிகையை தயாரித்து லக்கிம்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில், விவசாயிகள் மீது காரை ஏற்றிய சம்பவ இடத்தில் ஆசிஷ் மிஸ்ரா இருந்துள்ளார் என்று கூறி அவரது பெயர் முக்கிய குற்றவாளியாக இடம் பெற்றது.
இந்நிலையில், லக்கிம்பூர் விவசாயிகள் மீது கார் ஏற்றிய வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனான ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் நீதிமன்றத்தின் லக்னோ கிளை ஜாமீன் வழங்கியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.