Home /News /national /

விவசாயிகள் மீது கார் ஏற்றிய விவகாரம்: மத்திய அமைச்சரின் மகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து

விவசாயிகள் மீது கார் ஏற்றிய விவகாரம்: மத்திய அமைச்சரின் மகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து

ஆஷிஷ் மிஸ்ரா

ஆஷிஷ் மிஸ்ரா

லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு பிணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

    உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள் உள்ளிட்ட எட்டு பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் முதன்மை குற்றவாளிகளில் ஒருவராக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின்  மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு பிணை வழங்கி அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், ஆஷிஷ் மிஸ்ராவின் பிணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.

    மேலும், ஆஷிஷ் மிஸ்ரா ஒரு வாரத்தில் சரணடைய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த்மற்றும் நீதிபதி ஹிமா கோலி ஆகியோரின்  அமர்வு, "அலகாபாத் நீதிமன்றம்பொருத்தமில்லா காரணங்களை  காட்டி இந்த பிணையை அவசர கதியில் வழங்கியுள்ளது. நீதிமன்றம் வழங்கிய பிணையை எதிர்த்து உத்தரப் பிரதேச அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலானாய்வு குழு அறிவுறுத்தியுள்ளது. அதை உத்தரப் பிரதேச அரசு செய்யாதது ஏன்" எனக் கேள்வி எழுப்பியது.

    உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஒரு வாரத்திற்குள் மீண்டும் சரணடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    லக்கிம்பூர் கேரியில் நடந்தது என்ன?

    மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் அக்டோபர் 3ஆம் தேதி லக்கிம்பூர் கேரியில் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது அப்பகுதியில் விழாவில் பங்கேற்க அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வந்திருந்த போது போராட்டக்காரர்கள் மற்றும் ஆஷிஷ் மிர்ஸா தரப்புக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் போது ஆஷிஷ் மிஸ்ராவின் கார் விவசாயிகளின் மீது ஏறி 4 விவசாயிகள் உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். இது விவசாயிகள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட படுகொலை என  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்திய நிலையில், உத்தரப் பிரதேச காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

    அக்டோபர் 9ஆம் தேதி சிறப்பு புலனாய்வுக் குழுவின் முன் ஆஜரான ஆஷிஷ் மிஸ்ரா அன்று கைது செய்யப்பட்டார். தனக்கு பிணை கோரி ஆஷிஷ் மிஸ்ரா அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில், கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி ஆஷிஷ் மிஸ்ராவுக்கு  நீதிமன்றம் பிணை அளித்தது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Supreme court

    அடுத்த செய்தி