மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீர் சிங் பூரி மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக கடந்த இரு மாதங்களாக நாட்டில் விலைவாசி உயர்வு பொது மக்களிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விளக்கமாக பேசினார். அவர் பேசுகையில், "மத்திய அரசு ஏற்கனவே பெட்ரோலிய பொருள்கள் மீதான வரியை குறைத்துள்ளது. மாநில அரசுகள் தான் தங்களின் வாட் வரியை 50 சதவீதம் குறைத்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்.
குறிப்பாக, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மாநில அரசுகள் அதிக வரியை வசூல் செய்து மத்திய அரசை குறை கூறுவது எந்த விதத்தில் நியாயம்" என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: பிரியங்கா காந்தியிடம் ஓவியம் வாங்கினால் பத்ம பூஷண் விருது - யெஸ் வங்கி நிறுவனர் பரபரப்பு வாக்குமூலம்
மேலும் அவர், "எண்ணெய் நிறுவனங்கள் தான் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. இந்த நிறுவனங்களை மத்திய அரசு ஒன்றும் கட்டுப்படுத்துவதில்லை. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள முடக்கமும் இந்த விலை ஏற்றத்திற்கு காரணம். நாட்டின் விலைவாசி உயர்வை நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம். இது கவலைக்குரிய அம்சம். ஒரு அளவுக்கு மேல் விலைவாசி உயர்வதை அனுமதிக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தற்போது லிட்டர் ரூ.100ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது. தினம் தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்வதால் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களில் விலையும் உயர்ந்து வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் காலத்தில் பெட்ரோல் விலை உயராமல் இருந்தது. தேர்தல் முடந்த பின்னர் லிட்டருக்கு ரூ.10 அளவில் பெட்ரோல், டீசல் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.