• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்... வேளாண் சட்டம் வாபஸ் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க திட்டம்

பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்... வேளாண் சட்டம் வாபஸ் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க திட்டம்

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கிறது.

  • Share this:
    மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கிறது. இந்நிலையில், தனியார் கிரிப்டோகரன்சிக்கு தடைவிதிப்பதுடன், ரிசர்வ் வங்கியே டிஜிட்டல் கரன்சியை வெளியிடும் மசோதா உள்ளிட்ட 26 மசோதாக்கள், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன.

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29-ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 23-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதனை சுமூகமாக நடத்துவது தொடர்பாக, வரும் 28ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது. விவசாயிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் கடந்த வாரத்தில் அறிவித்தார். இதற்கான மசோதா, குளிர்கால தொடரில் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 11.15 மணிக்கு நடைபெறுகிறது. பிரதமரின் இல்லத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதனிடையே, இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளை முறைப்படுத்தும் மசோதாவையும் கொண்டுவர மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதன்படி, இந்தியாவில் அனைத்துவிதமான தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கும் தடைவிதிக்கப்பட உள்ளது. அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி வெளியிடவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட உள்ளது. எனவே, கிரிப்டோகரன்சி மசோதா உள்ளிட்ட 26 மசோதாக்கள், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.

    இந்தப் பட்டியலில், கடல்சார் மீன்வள மசோதா, மின்சார சட்டத் திருத்த மசோதா, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்க வகை செய்யும் மசோதா உள்ளிட்ட இடம்பிடித்துள்ளன. இந்த மசோதாக்கள் குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: