60 ஆண்டுகள் பழமையான வருமான வரி சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக, எதிர்வரும் பட்ஜெட்டில், வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. நேரடி வரிகள் தொடர்பாக பரிந்துரைகளை வழங்க ஏற்கனவே குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 2018-2019-ல் இந்தியாவில் 8.4 கோடி பேர் வருமான வரியை செலுத்தியுள்ளனர். இதன் மூலமாக 5 லட்சத்து 29 ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரி பெறப்பட்டுள்ளது.
தற்போதைய வரி விகிதங்களின் படி, 60 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வருமான வரி உச்சவரம்பு இரண்டரை லட்சமாகவும், 60ல் இருந்து 80 வயது உடையவர்களுக்கு வருமான வரி உச்சவரம்பு 3 லட்சமாகவும், 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 5 லட்சம் வரையும் வருமான வரி உச்சவரம்பு நடைமுறையில் உள்ளது.
இதனை மொத்தமாக மாற்றிவிட்டு, 5 முதல் 20 சதவிதம் வரையிலான வருமான வரியை மறு சீரமைக்க வேண்டும் என்ற பரிந்துரையை நேரடி வரிகள் வாரியத்தின் உறுப்பினர் அகிலேஷ் ரஞ்சன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு வழங்கியதாக தகவல் வெளியானது.
மேலும் படிக்க... வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்படுமா?
அதாவது, ஆண்டுக்கு 5 முதல் 10 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்கள் தற்போது செலுத்தும் 20 சதவித வரியை 10 சதவிதமாக குறைக்க வேண்டும் என்றும், 10 முதல் 20 லட்சம் வரை ஆண்டு வருமானம் வாங்குபவர்கள் செலுத்தும் 30 சதவித வரியை, 20 சதவிதமாக குறைக்க பரிந்துரைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. அதோடு சேர்ந்து புதிதாக 35 சதவிதம் என்ற புதிய வரி வரம்பை கொண்டு வரவும் பரிந்துரைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதாவது, ஆண்டுக்கு 2 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு, செஸ் வரிகள் எதுவும் இல்லாமல், மொத்தமாக 35 சதவிதம் வரி விதிக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஆனால் தற்போதைய நிலையில் இந்த பரிந்துரைகளை மத்திய அரசால் ஏற்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய நிலையில், மத்திய அரசுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை உள்ளதால், இந்த நிதிநிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் வருமா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்