பிரசாந்த் கிஷோர் பெயரில் மோசடி: காங்கிரஸ் தலைவர்களுக்கு வலைவிரித்த மர்ம நபர்கள்!

பிரசாந்த் கிஷோர்

பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பெயரில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்கள் பலரையும் தொடர்புக் கொண்டு பேசிய மர்ம நபர்கள், முதல்வர் அமரீந்தர் சிங் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்கும்படி கூறியுள்ளனர். வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

  • Share this:
பஞ்சாப்பில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பெயரில் சிலர் காங்கிரஸ் தலைவர்களை தொலைபேசியில்தொடர்பு கொண்டு முதல்வருக்கு எதிராக பேசமாறு கூறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் தனது ஐ.பேக் நிறுவனம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்கள் வகுத்து வருகிறார்.  கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடிக்கு இவர் தேர்தல் வியூக நிபுணராக பணியாற்றியுள்ளார். இதுபோல், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு  தலைவர்களுக்கும் தேர்தலில் வியூக நிபுணராக அவர் பணியாற்றி உள்ளார்.

அண்மையில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராகவும் பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலம், லூதியானாவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் சிலரை தொலைப்பேசியில் தனித்தனியாக தொடர்புகொண்ட மர்மநபர்கள், தங்களை பிரசாந்த் கிஷோர் என்று அடையாளப்படுத்திக்கொண்டுள்ளனர். மேலும் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கிற்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்கும்படியும் வெளிப்படையாக விமர்சிக்கும் படியும் கூறியுள்ளனர்.  அவ்வாறு விமர்சித்தால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.  இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் அளித்த புகாரின் பேரில் லூதியானா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த மாதம் இதேபோல், காங்கிரஸ் எம்.எல்.ஏ. குல்தீப் சிங்கை  பிரசாந்த் கிஷோர் பெயரில் தொடர்புகொண்ட நபர்கள் ரூ.5 கோடி   பேரம் பேசினர். இந்த சம்பவம் தொடர்பாக ஜலந்தர் பகுதியைச் சேர்ந்த 2 நபர்களை போலீசார் கைது செய்தனர். சர்மா என்ற நபர் இந்த சதித் திட்டத்துக்கு பின்னணியாக இருந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொலைக்காட்சியில் பிரசாந்த் கிஷோர் பேசுவதை கவனித்து அதேபோல், தானும் பேச முயன்று அவர் தலைவர்களை ஏமாற்றியது விசாரணையில் தெரிய வந்தது. பஞ்சாப் மட்டுமல்லாது பீகார், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த தலைவர்களையும் பிரசாந்த் கிஷோர் போல் பேசி அவர் ஏமாற்றியது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, மீண்டும் அதுபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது பஞ்சாப் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இம்முறை பிரசாந்த் கிஷோர் போன்று பேசிய நபர் எம்.எல்.ஏ., முன்னாள் மேயார்,கடந்த தேர்தலில் போட்டியிட்டவர்கள் ஆகியோரை குறிவைத்து தனது மோசடியை அரங்கேற்றியுள்ளார்.  இதில் பலரும் சட்டப்பூர்வமாக புகார் அளிக்க தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பெயர் குறிப்பிடாமல் பேசிய நபர் ஒருவர், தனது தொகுதியில் தான் ஆற்றி வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்ததாக பிரசாந்த் கிஷோர் போன்று பேசிய நபர் தெரிவித்ததாகவும், இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கி தருவதாகவும் ரூ.10 லட்சம் தர வேண்டும் என கேட்டதாகவும் கூறினார்.

இந்த மோசடி சம்பவம் தொடர்பாக பஞ்சாப் மாநில போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க.. அலோபதி குறித்து விமர்சனம்: பாபா ராம்தேவ் மீது வழக்குப் பதிவு..
Published by:Murugesh M
First published: