2023ஆம் ஆண்டில் உலகில் அதிக மக்கள் தொகை நாடாக இந்தியா முதலிடத்தில் இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை ஆய்வுத் தகவல் தெரிவிக்கின்றது. உலக மக்கள்தொகை தினம் ஆண்டுதோறும் ஜூலை 11ஆம் தேதி (இன்று) கொண்டாடப்படும் வேளையில் இந்த ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் பிரிவு உலக மக்கள் தொகை தொடர்பாக ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது.
அந்த ஆய்வறிக்கையின் தகவலின்படி, வரும் நவம்பர் மாதம் 15ஆம் தேதி உலகின் மக்கள் தொகை 800 கோடி என்ற எண்ணிக்கையை தொடும். 2030இல் உலக மக்கள் தொகை எண்ணிக்கை 850 கோடியாகவும், 2050ஆம் ஆண்டில் 970 கோடியாகவும் இது உயரும். உச்சபட்சமாக 2080ஆம் ஆண்டில் உலகின் மக்கள் தொகை ஆயிரத்து 400 கோடியாக அதிகரிக்கும். அதன்பின்னர் 2100ஆம் ஆண்டு வரை உலக மக்கள் தொகையின் எண்ணிக்கை இதே நிலையில் தொடரும் எனக் கணித்துள்ளது.
மேலும், நாடுகளை பொருத்தவரை, 2023ஆம் ஆண்டில் தற்போது முதலிடத்தில் உள்ள சீனாவை மிஞ்சி அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும். தற்போதைய நிலையில், இந்தியாவின் மக்கள் தொகை 141 கோடியாகவும், சீனாவின் மக்கள் தொகை 142 கோடியாகவும் உள்ளது. அடுத்தாண்டில் இந்தியா சீனாவின் எண்ணிக்கையை தாண்டிவிடும். தொடர்ந்து 2050ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 166 கோடியாகவும் அதேவேளை, சீனாவின் மக்கள் தொகை 131 கோடியாகவும் இருக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2050ஆம் ஆண்டில் அதிகரிக்கும் உலக மக்கள் தொகையில் பாதி அளவானது இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, நைஜீரியா, தான்சானியா ஆகிய எட்டு நாடுகளில் தான் இருக்கும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சீன மொழி தெரிந்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை.. சீனாவுக்கு பதிலடி..
உலகளவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கட்டுப்படுத்தப்பட்டு குறைந்துள்ளதாக கூறும் ஐநா ஆய்வு, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள நாடுகளில் மக்களின் ஆயுள் சராசரியை விட 7 ஆண்டுகள் குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளது. அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்கிய சீனா கடந்த 20 ஆண்டுகளாக மக்கள்தொகை கட்டுப்பாட்டிற்காக கடுமையான விதிகளை பிறப்பித்தது. ஒரு குழந்தைக்கு மேல் யாரும் பெறக் கூடாது என சட்டம் இயற்றிய சீனாவில் தற்போது இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. கட்டுபாடு காரணமாக மக்கள் தொகையில் சமம் இன்மை ஏற்பட்டுள்ளதால், மீண்டும் மக்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் ஏதுவாக சட்ட திட்டங்களை சீனா அரசு சமீபகாலமாக பிறப்பித்துவருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India vs China, Population, United Nation