ஹோம் /நியூஸ் /இந்தியா /

உ.பி.யில் அங்கீகாரமற்ற கட்சிகளின் எண்ணிக்கை 653, தமிழகத்தில் 184: இந்தியா முழுதும் 2,301 அங்கீகாரமற்ற கட்சிகள்- பலே நன்கொடை வசூல்

உ.பி.யில் அங்கீகாரமற்ற கட்சிகளின் எண்ணிக்கை 653, தமிழகத்தில் 184: இந்தியா முழுதும் 2,301 அங்கீகாரமற்ற கட்சிகள்- பலே நன்கொடை வசூல்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

அரசியல் கட்சிகள் அளிக்கும் விபரங்கள் அனைத்தும், மூன்று நாட்களில், தேர்தல் ஆணைய இணையதளத்தில், பொதுமக்கள் பார்வைக்கு பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  உத்தரப்பிரதேசத்தில் 653 கட்சிகள் தமிழகத்தில் 184 கட்சிகள், டெல்லியில் 291 கட்சிகள் உட்பட இந்தியா முழுதும் 10 ஆண்டுகளில் அங்கீகாரம் பெறாத கட்சிகளின் எண்ணிக்கை 2,301 ஆக அதிகரித்துள்ளது என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது;

  2019 முடிவு விவரங்களின்படி 7 தேசியக் கட்சிகள், 64 மாநிலக் கட்சிகள் 2,500 பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் வழங்கப்படாத கட்சிகள் இருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று இந்த ஆண்டு ஜனவரி மாதம் செய்தி வெளியிட்டிருந்தது.

  இந்தக் கட்சிகள் நன்கொடைகளையும் வசூலித்து வருகின்றன. கடந்த, 10 ஆண்டுகளில், நாடு முழுதும், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை, இரு மடங்கு உயர்ந்துள்ள தகவலும் வெளியாகி உள்ளது.

  இது தொடர்பாக ஜனநாயகச் சீர்த்திருத்தங்களுக்கான அமைப்பு கூறும் தகவல் வருமாறு:

  கடந்த, 2010- 19 வரையிலான 10 ஆண்டுகளில், அங்கீகாரம் பெறாமல் உள்ள அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை, இரு மடங்கு உயர்ந்து, 1,112 லிருந்து, 2,301 ஆக அதிகரித்துள்ளது. இந்த கட்சிகள், 2017-18ம் நிதியாண்டில், 6,138 பேரிடம், 24.60 கோடி ரூபாய் நன்கொடை வசூலித்துள்ளன. 2018 - 19ம் நிதியாண்டில், 6,860 பேரிடம், 65.45 கோடி ரூபாய் தேர்தல் நிதி பெற்றுள்ளன. இந்த வகையில், அங்கீகாரமற்ற கட்சிகள், இரு நிதியாண்டுகளில், 90 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளதாக, தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளன.

  இதில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த, அப்னா தேஷ் கட்சி, 65 கோடி ரூபாய் நன்கொடை பெற்று, முதலிடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில், 653 கட்சிகள் அங்கீகாரமின்றி உள்ளன. அடுத்த இடத்தில், 291 கட்சிகளுடன், டில்லி உள்ளது. தமிழகம், 184 கட்சிகளுடன், மூன்றாவது இடத்தில் உள்ளது.

  அங்கீகாரமற்ற கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும், அவை பெறும் நன்கொடை விபரங்களை, மாநில தலைமை தேர்தல் ஆணையரிடம் வழங்க வேண்டும் என்ற நடைமுறை, 2014, அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகள் அளிக்கும் விபரங்கள் அனைத்தும், மூன்று நாட்களில், தேர்தல் ஆணைய இணையதளத்தில், பொதுமக்கள் பார்வைக்கு பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

  ஆனால், அங்கீகாரமற்ற பல கட்சிகள், தேர்தல் ஆணைய விதிமுறைகளை சரிவர பின்பற்றுவதில்லை. அங்கீகாரமற்ற, 138 கட்சிகளை ஆய்வு செய்ததில், 50க்கும் மேற்பட்ட கட்சிகள், நன்கொடை பெற்ற விபரங்களை, தேர்தல் ஆணையத்திடம், தொடர்ந்து இரு ஆண்டுகளாக வழங்காமல் இருப்பது தெரிய வந்துள்ளது.

  இத்தகைய கட்சிகள் தேர்தலில் போட்டியிடாது. கருப்புப் பணத்தை வெள்ளையாக்க அரசியல் கட்சியைத் தொடங்கும் போக்கு உள்ளது என்று ஆங்கில ஊடகம் ஒன்றில் பெயர் கூற விரும்பாத தேர்தல் ஆணைய ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

  டிசம்பர் 2016-ல் தேர்தல் ஆணையம் சுமார் 300 கட்சிகளை நீக்கியது. இந்தக் கட்சிகள் பேப்பரில் மட்டுமே இருக்கும் கட்சிகள். இவற்றின் மூலம் நிதிமோசடி விவகாரங்கள் நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன என்கிறது ஜனநாயகச் சீர்த்திருத்தங்களுக்கான அமைப்பு.

  Published by:Muthukumar
  First published:

  Tags: India, Political party