Home /News /national /

பிரிட்டன் ராணி மணிமகுடத்தை அலங்கரித்த கோஹினூர் வைரம் இந்தியா திரும்புமா?

பிரிட்டன் ராணி மணிமகுடத்தை அலங்கரித்த கோஹினூர் வைரம் இந்தியா திரும்புமா?

கோஹினூர் வைரம்

கோஹினூர் வைரம்

Kohinoor Diamond : உலகிலேயே மிகப்பெரிய வைரமாக கருதப்படும் அந்த 21 கிராம் கோஹினூர் வைரத்தின் மதிப்பு அளவிடவே முடியாதது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    பிரிட்டன் ராணி மறைந்த நிலையில் அவரது மணிமகுடத்தை அலங்கரித்து வந்த இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட விலை மதிக்கமுடியாத கோஹினூர் வைரம் பற்றி, இந்திய நெட்டிசன்கள் கவலையுடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    முகமது பின் காசிம் தொடங்கி முகமது கஜினி முதல் செங்கிஸ்கான் வரை வரலாறு நெடுகிலும் இந்தியாவின் வளங்களை கொள்ளையடித்துச் சென்ற கூட்டம் ஏராளம். அவ்வாறு கொள்ளையடித்துச் செல்லப்பட்ட விலை மதிக்க முடியாத செல்வங்களுள் ஒன்று கோஹினூர் வைரம்.

    பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தற்போதைய ஆந்திரப் பிரதேசத்தின் சுரங்கத்தில்இருந்து வெட்டியெடுக்கப்பட்ட 105.6 கோரட் வைரம் அது, கோஹினூர் வைரம் 14-வது நூற்றாண்டில் குண்டூர் அருகே உள்ள சுரங்கத்தில் காகதீய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் வெட்டியெடுக்கப்பட்டதாகும். உலகிலேயே மிகப்பெரிய வைரமாக கருதப்படும் அந்த 21 கிராம் கோஹினூர் வைரத்தின் மதிப்பு அளவிடவே முடியாதது. தற்போதைய தெலங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள ஒரு இந்து கோயிலில் தெய்வத்தின் ஒரு கண்ணாக பயன்படுத்தப்பட்டது கோஹினூர் வைரம்.

    டெல்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூர் படையெடுத்து வந்தபோது அதை கொள்ளையடித்துச் சென்றான். பின்னர், முகலாய மன்னர் பாபர் வசம் சென்ற அந்த வைரத்தை 18 ஆம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தானத்தைச் சேர்ந்த நாதிர் ஷா கொள்ளையடித்துச் சென்றார். பின்னர், அது பஞ்சாபை ஆண்ட மகாராஜா ரஞ்சித் சிங் வசம் வந்தது. ஆனால் அவரது மகன் திலீப் சிங் ஆங்கிலேயரிடம் தோற்றபோது கோஹினூர் வைரத்தை அவர்கள் வசம் ஒப்படைத்தார். அது அப்போதைய இங்கிலாந்து பேரரசி விக்டோரியா வசம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் அவரது மணி மகுடத்தை அலங்கரிக்கத் தொடங்கியது.

    அதன்பிறகு ராணி எலிசபெச் வசம் பல தசாப்தங்களாக இருந்து வந்தது. அவர் மறைந்த நிலையில் அவரது கிரீடத்தில் இருக்கும் கோஹினூர் வைரத்தை மீட்க வேண்டும் எனக் கூறி இந்திய நெட்டிசன்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் களமாடி வருகின்றனர். ஆனால் அதனை இங்கிலாந்து மன்னராக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சார்லஸின் ராணி துணைவியான கமிலா பார்க்கர் சூடத் தயாராகிவிட்டார்.

    கோஹினூர் வைரம் சொந்த மண்ணுக்குத் திரும்ப இன்னும் எத்தனை காலம் ஆகுமோ என இந்திய நெட்டிசன்கள் சோகமாக விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அது இந்தியா திரும்பவே திரும்பாது என்பதே உண்மை. அதை ஆங்கிலேயர்கள் திலீப் சிங்கிடம் இருந்து வலுக்கட்டாயமாகவோ.திருடியோ செல்லவில்லை என்பதால் அதை கேட்பது சரியாக இருக்காது என்பதே இந்திய அரசின் நிலைப்பாடு பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Diamond, Queen Elizabeth

    அடுத்த செய்தி