Home /News /national /

இறுதிக் கட்டத்தில் பிரிட்டன் பிரதமர் தேர்தல்.. முன்னணியில் ரிஷி சுனக்!

இறுதிக் கட்டத்தில் பிரிட்டன் பிரதமர் தேர்தல்.. முன்னணியில் ரிஷி சுனக்!

பிரிட்டன் பிரதமப் ரேஸ்சில் ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ்

பிரிட்டன் பிரதமப் ரேஸ்சில் ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ்

புதிய பிரதமரை தேர்வு செய்ய சுமார் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த 1.8 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

    பிரிட்டனில் கர்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போரிஸ் ஜான்சன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டு ஆட்சி நடத்தி வந்த நிலையில், போரிஸ் மீது பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. குறிப்பாக, கோவிட் லாக்டவுன் நேரத்தில் இவர் விதிமுறைகளை மீறி பார்ட்டி ஒன்றில் பங்கேற்று மாட்டிக்கொண்டார். நாட்டின் உயரிய பொறுப்பில் இருக்கும் பிரதமரே இவ்வாறு விதிமுறைகளை மீறி செயல்பட்டது போரிஸ் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு அவர் ஆளானர். இவர் மீது எழுந்து வரும் புகார்களின் காரணமாக சொந்த கட்சி உறுப்பினர்கள் மத்தியிலேயே போரிஸ்சுக்கான ஆதரவு சரிந்தது. இதையடுத்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களின் அழுத்தம் காரணமாக தனது பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து புதிய பிரதமரை தேர்வு செய்யும் பணியில் கன்சர்வேட்டிவ் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. புதிய பிரதமர் பதவிக்கு வர 8 எம்.பி.க்கள் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து, ஒவ்வொரு சுற்றுகளாக எம்.பி.க்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், முன்னாள் நிதியமைச்சருமான ரிஷி சுனக் இந்த போட்டியில் முன்னணி வேட்பாளராக களம் கண்டார். 42 வயதான ரிஷி சுனக் அந்நாட்டின் டோரி என்ற பகுதியில் தற்போது எம்பியாக உள்ளார்.

    கன்சர்வேட்டிவ் கட்சியின் உள்கட்சி தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில்,நேற்று ஐந்தாவது கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் 137 வாக்குகளுடன் ரிஷி சுனக் முன்னிலை பெற்றுள்ளார். போரிஸ் ஜான்சன் ஆதரவு பெற்ற லிஸ் ட்ரஸ் 113 வாக்குகளும், மற்றொரு வேட்பாளரான பென்னி மோர்டான்ட் 105 வாக்குகளும் பெற்றனர். இந்நிலையில், மூன்றாவது இடம் பிடித்த பென்னி மோர்டான்ட் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.


    எனவே, ரிஷி சுனக் அல்லது லிஸ் ட்ரஸ் ஆகிய இருவரில் ஒருவர் தான் பிரிட்டன் நாட்டின் அடுத்த பிரதமராக தேர்வாகவுள்ளனர். இந்த இறுதி தேர்தலில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன்சர்வேடிவ் உறுப்பினர்கள் வாக்களிக்கவுள்ளனர். முடிவுகள் வரும் செப்டெம்பர் 5ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. ரிஷி சுனக் வெற்றி பெற்று பிரதமராகும் பட்சத்தில் பிரிட்டன் நாட்டின் மிக இளைய பிரதமர் என்ற பெருமையை பெறுவார். மேலும், இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டனில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் ஆட்சி செய்கிறார் என்ற பெருமை கிடைக்கும்.

    இதையும் படிங்க: இலங்கை பொருளாதார நெருக்கடி... பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படும் பெண்கள்!

    ஆக்ஸ்போர்ட்டு, ஸ்டான்போர்டு ஆகிய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை முடித்து, உலகின் முன்னணி நிதி நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ்சில் முன்னணி பொறுப்புகளை வகித்தவர் ரிஷி சுனக். முன்னணி தொழிலதிபரான இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளான அக்சதா மூர்த்தியை 2009ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். இருவரும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படிக்கும் போது காதலித்து பின்னர் மணம் முடித்துக்கொண்டனர். இருவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Boris johnson, Britain, Prime minister

    அடுத்த செய்தி