மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா -
காங்கிரஸ் - தேசியவாத
காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்எல்ஏக்கள், அசாமில் முகாமிட்டுள்ளனர். சிவசேனாவை சேர்ந்த 39 அதிருப்தி எம்எல்ஏக்கள் உட்பட மொத்தம் 48 எம்எல்ஏக்கள், ஏக்நாத் ஷிண்டே அணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நாளை சிறப்பு கூட்டத்திற்கு அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியாரி அழைப்பு விழுத்திருந்தார். இதில் உத்தவ் தாக்ரே தலைமையிலான அரசு நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட ஆளுநரின் முடிவுக்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் எங்களின் 16 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க கோரி ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டவிரோத நடவடிக்கை.இந்த தருணத்திற்காகத்தான் ஆளுநர் காத்திருந்தார். எனவே ஆளுநரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மகாராஷ்டிராவில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்கு தடையில்லை என உத்தரவிட்டது. இதன்மூலம் மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து ஃபேஸ்புக் லைவில் உத்தவ் தாக்கரே உரையாற்றினார். அப்போது நான் மகாராஷ்டிரா முதல்வர் மற்றும் எம்.எல்.சி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மேலும் நான் எதிர்பாராத விதமாக அதிகாரத்திற்கு வந்தேன். அதே பாணியில் பதவியை விட்டு விலகுகிறேன். நான் எங்கும் போகப்போவதில்லை. நான் இங்கு தான் இருப்பேன். மீண்டும் சிவசேனா பவனின் சேரில் அமருவேன். நான் என் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.