சைடு கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்ய சொன்ன பயணிக்கு கத்திக்குத்து: ஊபர் கார் ஓட்டுனர் வெறிச்செயல்!!

UBER

ஓட்டுனரின் சைடு கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்யுமாறு அவரிடம் சொன்னேன். ஆனால் காரை இயக்குவது குறித்து நான் அவருக்கு பாடம் எடுப்பதாக அவர் நினைத்துக் கொண்டார்.

  • Share this:
ஊபர் கால் டேக்ஸி ஓட்டுனர் ஒருவர் தனது காரில் பயணம் செய்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரியின் வயிற்றில் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

61 வயதாகும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான ஜிதேந்தர் ரானா என்பவர், ஊபர் வாடக்கை காரில் தனது குடும்பத்தினருடன் பயணித்துக் கொண்டிருந்த போது சைடு கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்வது மற்றும் அதிவேகத்தில் கார் இயக்கியது போன்ற விவகாரங்களில் கார் ஓட்டுனருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தன்னை கார் ஓட்டுனர் கத்தியால் வயிற்றில் குத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

டெல்லி காவல்துறையில் துணை ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவரான ஜிதேந்தர் ராணா கடந்த திங்களன்று (செப் 6) இரவு சுமார் 8.30 மணியளவில் டெல்லியின் ரஜோரி கார்டனில் இருந்து மால்வியா நகரில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காக ஊபர் கால் டேக்ஸியை புக் செய்தார். தனது மனைவி மற்றும் மைனர் வயது மகளுடன் காரில் புறப்பட்டிருக்கின்றனர்.

“அச்சமயம் காரை இயக்கிய ஓட்டுனர் ராஜ் குமார் (வயது 31) என்பவர் காரை, சாலை விதிகளுக்கு முரணாகவும், அதி வேகத்திலும் இயக்கினார். அவர் சாலையோர வியாபாரி ஒருவரையும், சாலையில் சென்ற இருசக்கர வாகனம் ஒன்றையும் மோதுவது போல சென்றார். ஓட்டுனர் குடி போதையில் இருக்க வேண்டும் என கருதினேன். நாங்கள் சென்ற கார் நேரு நகர் பகுதியை அடைந்தவுடன் மேலும் வேகமெடுத்தது. ஓட்டுனர் ஒழுங்கீனமாக காரை இயக்கினார். என் வீடு அங்கிருந்து சுமார் 1 கிமீ தொலைவில் தான் இருந்தது.

Also Read:  தாலிபான்கள் செய்த கொடூரச் செயல்: முன்னாள் துணை அதிபரின் சகோதரருக்கு நேர்ந்த அவலம்!

ஓட்டுனரின் சைடு கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்யுமாறு அவரிடம் சொன்னேன். ஆனால் காரை இயக்குவது குறித்து நான் அவருக்கு பாடம் எடுப்பதாக அவர் நினைத்துக் கொண்டார். இது குறித்து எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

காரை உடனடியாக நிறுத்திய ஓட்டுனர் எங்கள் அனைவரையும் இறங்கச் சொன்னார். பின்னர் அவர் வைத்திருந்த கத்தியால் எதிர்பாராதவிதமாக என்னை வயிற்றில் குத்தினார். என் மனைவியும், மகளும் அழுது கொண்டே இருந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடோடி வந்து ஓட்டுனரை அமுக்கிப் பிடித்து அவரிடம் இருந்த கத்தியை வாங்கிக் கொண்டனர். பின்னர் அந்த ஓட்டுனர் அங்கிருந்து தப்பியோடினார்.” இவ்வாறு ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜிதேந்தர் ராணா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Also Read:   இந்த போன்களில் இனி வாட்ஸ் அப் பயன்படுத்த முடியாது – 2021 தான் கடைசி!

இதன் பின்னர் மயங்கிய ஜிதேந்தர் ராணாவை மீட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு வயிற்றில் கத்திக் குத்து காயங்கள் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர் நலமுடன் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுனர் ராஜ் குமார் கடந்த புதனன்று நாங்லோய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து ஊபர் நிறுவன செய்தித்தொடர்பாளரை அணுகிய போது, யாருக்கும் இப்படியொரு சம்பவம் நடக்கக் கூடாது. காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்போம். சம்பந்தப்பட்ட ஓட்டுனர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 
Published by:Arun
First published: