அமைச்சருக்கு உரிய வரவேற்பு அளிக்காத அதிகாரிகள் சஸ்பெண்ட்!

ஜனக் ராம்

அதிகாரத்துவம் தலைவிரித்தாடுவதாக சாடிய அமைச்சரை கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய பெண் அதிகாரி ஹஜோத் கவுர் சமாதானப்படுத்தினார். பூங்கொத்துடன் வந்த ஹஜோத் கவுர், நடந்தததுக்காக வருத்தம் தெரிவித்தார்.

  • Share this:
பீகாரில் புதிதாக பொறுப்பேற்க வந்த அமைச்சருக்கு அதிகாரிகள் சரிவர வரவேற்பு அளிக்காதது இரண்டு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வழிவகுத்துள்ளது.

பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் இணைந்து நிதிஷ் குமார் தலைமையில் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. இதனிடையே சமீபத்தில் பீகார் அமைச்சரவையை விரிவுபடுத்திய நிதிஷ் குமார் பாஜக தலைவர் ஜனக் ராம் என்பவரை சுரங்கத்துறை அமைச்சராக நியமித்தார்.

இதன் காரணமாக கடந்த செவ்வாயன்று (பிப் 9) தனது ஆதரவாளர்களுடன் சுரங்கங்கள் மற்றும் புவியியல் துறையில் புதிய அமைச்சராக பொறுப்பேற்பதற்காக ஜனக் ராம் சென்றார். புதிதாக பொறுப்பேற்கும் அமைச்சரை அத்துறையின் மூத்த அதிகாரி தான் உடன் அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைப்பது மரபு. ஆனால் தான் சென்ற நேரத்தில் மூத்த அதிகாரிகள் யாரும் இல்லாமல் இருந்தது அமைச்சரை அதிருப்திக்கு ஆளாக்கியது. முதன்மைச் செயலாளரான ஹஜோத் கவுர் இந்த சமயம் ஆலோசனை கூட்டம் ஒன்றில் பங்கேற்றிருந்ததாக கூறப்படுகிறது.

நிதிஷ் குமார்


பட்டியலின தலைவரும் கோபால்கஞ்ச் தொகுதியின் முன்னாள் எம்.பியான ஜனக் ராம் சுதாரித்துக் கொண்டு, அவரின் அருகில் இருந்த 4-ம் நிலை அரசு அதிகாரி தனக்கு மலர் கொத்து கொடுத்தால் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

அருகில் இருந்து பியூன் சந்தோஷ் யாதவ் என்பவர் உடனே சென்று மலர் கொத்து அளித்து அமைச்சரை அவரின் இருக்கைக்கு அழைத்துச் சென்றார், அப்போது பேசிய அமைச்சர் கடை நிலை ஊழியர்களை நான் சகோதரர்களாக எண்ணுகிறேன், மாஃபியா கும்பலை நிச்சயம் வேரறுப்பேன், இந்த துறையிலும் அதனை செய்ய விரும்புகிறேன் என்றார்.

அதிகாரத்துவம் தலைவிரித்தாடுவதாக சாடிய அமைச்சரை கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய பெண் அதிகாரி ஹஜோத் கவுர் சமாதானப்படுத்தினார். பூங்கொத்துடன் வந்த ஹஜோத் கவுர், நடந்தததுக்காக வருத்தம் தெரிவித்தார். இருப்பினும் அமைச்சர் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

இதனிடையே அமைச்சருக்கு சரியான வரவேற்பு அளிக்க முடியாததற்கு காரணம் அவரின் வருகை குறித்து அவரின் தனிச் செயலர் ராஜேந்திர சவுகான் மற்றும் உதவியாளர் சந்தோஷ் குமார் எங்களுக்கு தெரியப்படுத்தாததே என முதன்மைச் செயலர் ஹஜோத் கவுர் தெரிவித்தார்.

இந்நிலையில் அமைச்சருக்கு வரவேற்பு அளிக்காததற்கு இருவரையும் காரணம் காட்டி அவ்விருவருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பீகாரில் அதிகாரத்துவம் எதுவும் இல்லை என்று ஹஜோத் கவுர் மறுத்தார்.

அடுத்தடுத்த நிகழ்வுகளால் பீகாரில் பரபரப்பு ஏற்பட்டது, இந்நிலையில் இது தொடர்பாக பேசிய அமைச்சர் ஜனக் ராம், நாங்கள் அனைவரும் இணைந்து இத்துறையின் வளர்ச்சிக்காக ஒற்றுமையாக செயல்படுவோம். இங்கு அதிகாரத்துவம் என்று எதுவும் கிடையாது என கூறினார்.

முன்னதாக கடந்த மாதம் இதே போன்ற ஒரு சம்பவம் மத்திய பிரதேசத்திலும் நடைபெற்றது. பொதுப்பணித்துறை அமைச்சர் கோபால் பார்கவ் கடந்த மாதம் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சாகரில் உள்ள சர்க்யூட் இல்லத்திற்கு ஜன 25 இரவு வந்தார். அவரை வரவேற்க வேண்டிய அதிகாரிகள் இருவர் வராத நிலையில் அடுத்த நாள் அவர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: