ஏடிஎம் இயந்திரங்களை ஆப், ஆன் செய்து 6 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்ட ஹரியானாவை சேர்ந்த 2 பேர் திருப்பதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதியில் உள்ள பல்வேறு ஏடிஎம் இயந்திரங்களில் நூதனமான முறையில் மோசடிகளில் ஈடுபடும் மர்ம நபர்கள் வங்கிகளுக்கு இழப்புகளை ஏற்படுத்துகின்றனர் என்று திருப்பதி குற்றத் தடுப்பு போலீசாருக்கு வங்கிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை தொடர்ந்து போலீசார் திருப்பதி பேருந்து நிலையம் அருகே உள்ள ஏடிஎம்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் செயல்பட்ட 2 பேரை பிடித்து போலீசார் நேற்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் இரண்டு பேரும் திருப்பதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 59 ஏடிஎம் இயந்திரங்களில் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு 6,70,000 ரூபாய் வரை சுருட்டியது தெரியவந்தது.
இதுபற்றி திருப்பதி காவல்துறை கண்காணிப்பாளராக வெங்கட அப்பள நாயுடு கூறியதாவது, வங்கிகளில் இருந்து வந்த புகாரை தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்ட போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 2 பேரும் ஹரியானாவை சேர்ந்தவர்க என்பது தெரியவந்தது.
பணம் எடுப்பது போல் ஏடிஎம்க்கு செல்லும் இரண்டு பேரில் ஒருவன் ஏடிஎம் அட்டையை இயந்திரத்தில் சொறுகி பணம் எடுப்பான். பணம் வெளியில் வரும்போது மற்றொருவன் ஏடிஎம் இயந்திரத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்பை துண்டிக்கும் வகையில் அங்குள்ள சுவிட்சை ஆப் செய்து விடுவான். பின்னர் மீண்டும் அந்த சுவிட் ஆன் செய்யப்படும்.
இதனால் பணமும் வெளியில் வந்துவிடும், ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து வரும் ரசீதில் தொழில் நுட்ப கோளாறு என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
Also read... அரசு பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநர், நடத்துனர் கைது!
அதனை ஆதாரமாகக் கொண்டு வங்கியை மீண்டும் தொடர்பு கொண்டு எங்களுக்கு பணம் வரவில்லை என்று கூறி இரண்டு பேரும் இதுபோல் பணம் பெற்று வந்தனர். இதுவரை 6,70,000 ரூபாய் வரை இது போன்ற மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 99 ஏடிஎம் கார்டுகள், 2 செல்போன், 60,000 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவர்களுக்கு மூளையாக செயல்பட்ட மேலும் 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என்று கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.