ஹோம் /நியூஸ் /இந்தியா /

‘இந்த சோதனையே தவறானது... பெண்களை மனரீதியாக பாதிக்கிறது ...’ இரு விரல் பரிசோதனைக்கு தடைவிதித்த உச்ச நீதிமன்றம்!

‘இந்த சோதனையே தவறானது... பெண்களை மனரீதியாக பாதிக்கிறது ...’ இரு விரல் பரிசோதனைக்கு தடைவிதித்த உச்ச நீதிமன்றம்!

பாலியல் பாதிப்புக்கு ஆளான நபரின் பாலியல் வரலாற்றை தெரிந்துகொள்ள இன்றும் இதுபோன்ற பரிசோதனை நடத்தப்படுபடுவது வருத்தமளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

பாலியல் பாதிப்புக்கு ஆளான நபரின் பாலியல் வரலாற்றை தெரிந்துகொள்ள இன்றும் இதுபோன்ற பரிசோதனை நடத்தப்படுபடுவது வருத்தமளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

பாலியல் பாதிப்புக்கு ஆளான நபரின் பாலியல் வரலாற்றை தெரிந்துகொள்ள இன்றும் இதுபோன்ற பரிசோதனை நடத்தப்படுபடுவது வருத்தமளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India

 பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு இரு விரல் பரிசோதனை நடத்தக் கூடாது என மத்திய சுகாதாரத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரு விரல் சோதனைக்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் சந்திரசூடு மற்றும் ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில், பாலியல் பாதிப்புக்கு ஆளான நபரின் பாலியல் வரலாற்றை தெரிந்துகொள்ள இன்றும் இதுபோன்ற சோதனை நடத்தப்படுவது வருத்தமளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே, இரு விரல் பரிசோதனைக்கு தடை என்றும், இந்த உத்தரவு பின்பற்றபடுகிறதா என மத்திய, மாநில சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் தனது உத்தரவில் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இதனை அனைத்து மாநில காவல்துறை தலைமைகளும் உறுதி செய்ய வேண்டும்; இது தொடர்பான பயிலரங்குகளை நடத்த அறிவுறுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவிரல் பரிசோதனை என்பது பெண்களின் பாலுறுப்புக்குள் இரு விரல்களை செலுத்தி கன்னித்திரை கிழியாமல் இருக்கிறதா என்று சோதனை செய்யப்படும் முறையாகும்.

நீதிபதிகள் கூறியவை:

பாதிக்கப்பட்ட ஒருவரின் பாலியல் வரலாற்றின் சான்றுகள் வழக்குக்குத் தேவையற்றது. அது இன்றும் தொடர்ந்து நடத்தப்படுவது வருத்தமளிக்கிறது. இதுபோன்ற சோதனைக்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை. அதற்குப் பதிலாக அது பெண்களை மீண்டும் பாதிப்புக்கு ஆளாக்குவது மட்டுமின்றி அவர்களை மனரீதியாக பாதிக்கிறது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.

பாலியல் ஈடுபாடு அதிகம் கொண்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட மாட்டார்கள் என்ற தவறான யூகத்தின் அடிப்படையிலானது இந்த சோதனை. ஒரு பெண், தான் பாலியல் ஈடுபாடு அதிகம் கொண்டதால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறினால் அதனை ஏற்க மறுப்பது ஆணாதிக்க சிந்தனை மற்றும் வக்கிரமான மனோபாவம் கொண்டதாகும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதன் மூலம், இதுபோன்ற சோதனையை நடத்தும் நபர்கள் குற்றவாளிகளாக நேரிடும் என்றும் நீதிபதிகள் அமர்வு எச்சரித்துள்ளது.

இதுமட்டுமின்றி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு மருத்துவ நிபுணர்கள் மேற்கொள்ளும் இரு விரல் பரிசோதனைக்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. அந்த உத்தரவில், நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் என்.சதீஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது, ‘பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு, குறிப்பாக சிறார்களுக்கு மருத்துவர்கள் இரு விரல் பரிசோதனை செய்வது வழக்கத்தில் உள்ளது; இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது’ என நீதிபதிகள் கூறியிருந்தனர்.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கன்னித்திரை அப்படியே உள்ளதா இல்லையா என்பதை இரண்டு விரல்களை பெண்ணுறுப்புக்குள் நுழைத்து பரிசோதனை செய்வதாலோ அல்லது பெண்ணுறுப்பு திறப்பு மற்றும் அது கிழிந்த அளவைப் பார்ப்பதாலோ ஒரு பெண் உடலுறவு கொண்டதாக நிரூபிக்க முடியாது. உடலுறவின் காரணமாக மட்டுமே கன்னித்திரை கிழிகிறது என்ற அனுமானத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by:Archana R
First published:

Tags: Rape case, Sexual abuse, Supreme court