உலக அளவில் சில குறிப்பிட்ட நிகழ்வுகள் எப்போதும் பிரபலமானதாக இருக்கும். குறிப்பாக பிரசவம் சார்ந்த செய்திகள் எப்போதும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்மணி முதல் இரட்டை குழந்தைகள் பற்றிய செய்திகள் வரை கேட்பதற்கு மிக சுவாரஸ்யமாக இருக்கும். இதே போன்ற ஒரு சிறப்பான நிகழ்வு தான் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது. அதுவும் தெலுங்கானா மாநில பேருந்தில் பிறந்த பெண் குழந்தைகளை பற்றிய செய்தி தான் தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த நவம்பர் 30 ஆம் தேதி அன்று நாகர்கர்னூல் டிப்போவிற்கு சொந்தமான தெலுங்கானா மாநில பேருந்தில் நிறைமாத கர்ப்பமாக இருந்த பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். அப்போது பெத்தகோத்தப்பள்ளி கிராமத்தின் அருகே பிரசவ வலி ஏற்பட்டதால், ஓடும் பேருந்திலேயே பெண் குழந்தையை பிரசவித்துள்ளார். இந்த செய்தி சுற்று வட்டாரம் முழுவதும் வேகமாக பரவ தொடங்கியது. அடுத்தாக டிசம்பர் 7 ஆம் தேதி அன்று சித்திபேட்டை அருகில் மதிய நேரத்தில், இதே போன்று தெலுங்கானா மாநில பேருந்தில் நிறைமாத கர்ப்பிணியாக பயணம் செய்த மற்றொரு பெண்ணிற்கு அந்த பேருந்திலேயே பிரவசமாகி பெண் குழந்தை பிறந்துள்ளது என்று தெலுங்கானா மாநில பேருந்து கழகத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் VC சஜ்ஜனார் தெரிவித்துள்ளார்.
இந்த இனிப்பான செய்தியை VC சஜ்ஜனார் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "சமீபத்தில் ஓடும் தெலுங்கானா பேருந்துகளில் (TSRTC) பிறந்த இரண்டு பெண் குழந்தைகளுக்கு 'பிறந்தநாள்' பரிசு ஒன்றை தெலுங்கானா போக்குவரத்து கழகம் வழங்கியுள்ளது. இதன்படி பேருந்தில் பிறந்துள்ள இந்த 2 பெண் குழந்தைகளுக்கும், வாழ்நாள் பேருந்து பயண அனுமதிச்சீட்டுகள் இலவசம்" என்று ட்வீட் செய்துள்ளார். இந்த பதிவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் இதை பற்றிய அடுத்தடுத்த ட்வீட்களில், இந்த இரண்டு பெண்களும் அந்தந்த இடங்களுக்குச் செல்லும் போது எதிர்பாராத விதமாக அவர்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா போக்குவரத்து கழக குழு உறுப்பினர்கள் மற்றும் சக பயணிகள் இந்த பெண்களுக்கு நல்லபடியாக பிரசவமாவதற்கு உதவினர் என்று துணைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். அதன் பிறகு சுகாதார துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று அந்த இரண்டு தாய்மார்களையும், பெண் குழந்தைகளையும் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தேவையான சிகிச்சைகளை அளித்துள்ளனர். தற்போது இரு தாய்மார்களும், குழந்தைகளும் நலமாக உள்ளனர் என்றும் தொடர்ச்சியான ட்வீட்களில் சஜ்ஜனார் தெரிவித்துள்ளார்.
பேருந்தில் பயணித்த பயணிகளும், தெலுங்கானா போக்குவரத்து கழக உறுப்பினர்களும் அங்கு இல்லையென்றால் இந்த இரு பெண்களுக்கு சரியான முறையில் பிரசவம் நடந்திருக்குமா என்பது சந்தேகமே. பேருந்தில் நிறைமாத கர்ப்பிணி பெண்கள் பயணிக்கும் போது எப்போதும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Telangana