TWITTER BLOCKS RAJYA SABHA MP CHAUDHARY SUKHRAM SINGH YADAVS ACCOUNT REPORT IN INDIA ARU
சமாஜ்வாதி கட்சி ராஜ்யசபா எம்.பியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்! - பணிந்ததா ட்விட்டர்?
எம்.பியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்!
@MPSukhram என்ற அக்கணக்கை பின்தொடரும் 244 ஃபாலோயர்களுக்கு, அவரின் கணக்கு சட்டப்பூர்வ கோரிக்கையின் காரணமாக இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பதாக காட்டுகிறது.
சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பியின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் முதல் முறையாக மிக உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவரின் கணக்கை அந்நிறுவனம் முடக்கியிருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தின் பிரதான கட்சியாக விளங்கும் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பியான சவுத்ரி சுக்ராம் சிங் யாதவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு நேற்று முடக்கப்பட்டுள்ளது.
@MPSukhram என்ற அக்கணக்கை பின்தொடரும் 244 ஃபாலோயர்களுக்கு, அவரின் கணக்கு சட்டப்பூர்வ கோரிக்கையின் காரணமாக இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பதாக காட்டுகிறது.
இந்தியாவில் அவரின் கணக்கை யாரும் பார்க்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து அவரது கணக்கை பார்க்க முடியும்.
அதிகாரப்பூர்வ கணக்கு என்ற புளூ டிக் மார்க் இல்லாத ராஜ்யசபா எம்.பியான சவுத்ரி சுக்ராம் சிங் யாதவின் கணக்கு முடக்கப்பட்டிருப்பதாக அவரின் கணக்கை பராமரித்து வருபவர்களிடம் கேட்ட போது, ஆம் இது அவரின் அதிகாரப்பூர்வ கணக்கு தான். கடந்த புதன் முதல் அவரின் கணக்குக்கு வரும் லைக்குகள், ரிடீவீட், ரிப்ளைகளை எங்களால் பார்க்க முடியவில்லை. எங்களால் பதிவுகளை இட முடிகிறது, ஆனால் அவற்றை பார்க்கத்தான் முடியவில்லை என தெரிவித்தனர்.
தனது கணக்கு முடக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி சவுத்ரி சுக்ராம், மக்கள் பிரதிநிதி ஒருவரின் ட்விட்டர் கணக்கை முடக்கியுள்ளனர். ஜனநாயகத்திற்கு இழைக்கப்பட்ட மோசமான அநீதி இது என குறிப்பிட்டார். எனது மாமாவும் ஒரு எம்.பி, எனது தந்தை ஒரு எம்.பி, எங்கள் குடும்பத்தில் நான் 3வது எம்.பி. பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் இருந்து வரும் எனக்கே இந்த நிலை என்றால், சாதாரணமானவர்களின் நிலை என்னவாக இருக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய அரசுக்கு எதிராக அவதூறு தகவல்களை பரப்பி வரும் 1,178 கணக்குகளை முடக்க வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்தை மத்திய அரசு வலியுறுத்தியது. அதில், இந்திய சட்டங்களின்படி 500 கணக்குகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுப்பதாகவும், கருத்து சுதந்திரம் கருதி மற்ற கணக்குகளை முடக்க முடியாது என்றும் ட்விட்டர் நேற்று விளக்கமளித்தது. இந்த நிலையில் தான் எம்.பி சவுத்ரி சுக்ராமின் கணக்கு முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.