ட்விட்டர் நிறுவனத்திற்கும் பாஜக தலைவர்களுக்குமிடையே மோதல்... புதிய செயலியை பிரபலப்படுத்தும் மத்திய அமைச்சர்கள்

ட்விட்டர் நிறுவனத்திற்கும் பாஜக தலைவர்களுக்குமிடையே மோதல்... புதிய செயலியை பிரபலப்படுத்தும் மத்திய அமைச்சர்கள்

Koo

மத்திய அரசு பரிந்துரைத்த கணக்குகளை முடக்காததால், ட்விட்டர் நிறுவனத்திற்கும் பாஜக தலைவர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. ட்விட்டருக்குப் பதிலாக புதிய செயலியை மத்திய அமைச்சர்கள் பிரபலப்படுத்தி வருகின்றனர்.

 • Share this:
  குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின்போது நடைபெற்ற வன்முறையைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோரின் ஆயிரத்து 300 கணக்குகளை முடக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு பரிந்துரை செய்தது. இதற்கு பதிலளித்த ட்விட்டர் நிறுவனம், மத்திய அரசு பரிந்துரைத்துள்ள கணக்குகளை ஒட்டு மொத்தமாக முடக்க முடியாது என்றும், மாறாக இந்தியாவுக்குள் மட்டும் சில கட்டுப்பாடுகளை விதிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தது.

  இது தொடர்பாக அந்நிறுவன அதிகாரிகளை தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலர் சந்தித்து பேசுவார் என்று மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக பாஜக தலைவர்கள் ட்விட்டரிலேயே பதிவிட்டு வருகின்றனர். பெங்களுரூவைச் சேர்ந்த பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, இந்திய சட்டங்களுக்கு மேலாக ட்விட்டர் நிறுவனம் தன்னை பாவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். எந்த சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்ன செய்யக் கூடாது என ட்விட்டர் தேர்வு செய்வதாகவும் தேஜஸ்வி கூறியுள்ளார்.

  பாஜக தேசிய செயலாளர் பி.எல். சந்தோஷ், ஒரு நாட்டின் சட்டங்களை மதிக்க வேண்டும் என்றும், தனக்கென ஒரு சட்டத்தை இயற்றிக்கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளார். இந்தியாவில் அரசியலமைப்பு சட்டத்தின் வழி ஆட்சி நடைபெறுவதாகவும் சில கார்பரேட் நிறுவனங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சந்தோஷ் பதிவிட்டுள்ளார்.

  மேலும் படிக்க... 18-ஆம் நூற்றாண்டின் சிந்தனையுடன், 21-ஆம் நூற்றாண்டின் வேளாண் சவால்களை சந்திக்க முடியாது - பிரதமர் மோடி

   

  இதனிடையே பெங்களூருவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ள ட்விட்டர் போலவே இருக்கும் Koo என்ற செயலியை மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பியூஷ் கோயல் ஆகியோர் பிரபலப்படுத்தி வருகின்றனர்.
  Published by:Sankaravadivoo G
  First published: