திருமண தோஷத்தை கழிப்பதற்காக டியூஷன் பயின்ற 13 வயது மாணவரை திருமணம் செய்த ஆசிரியை!

திருமண தோஷத்தை கழிப்பதற்காக டியூஷன் பயின்ற 13 வயது மாணவரை திருமணம் செய்த ஆசிரியை!

மாணவரை திருமணம் செய்த ஆசிரியை

சட்டவிரோதமாக தங்கவைக்கப்பட்ட சிறுவனை கட்டாயப்படுத்தி ஆசிரியையும், அவரின் பெற்றோர்களும் திருமண சடங்குகள் செய்ததாகவும். இந்த திருமணத்தின் போது மெகந்தி வைபவம், முதலிரவு என அனைத்து சம்பிரதாயங்களும் கடைபிடிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

  • Share this:
தன்னிடம் டியூஷன் பயின்ற 13 வயது மாணவர் ஒருவரை திருமண தோஷம் கழிப்பதற்காக ஆசிரியை திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டியூஷனுக்காக சென்ற 13 வயது மாணவர் வீடு திரும்பிய நிலையில் தனக்கு நடந்த திருமண சடங்குகள் குறித்து பெற்றோரிடம் தெரிவித்ததால் உடனடியாக ஆசிரியை மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் பின்னர் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரின் பஸ்தி பவா கேல் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் இருந்து வந்தார். அவருக்கு ஜாதகத்தில் திருமண தோஷம் இருப்பதாகவும் மைனர் சிறுவன் ஒருவனை அடையாள திருமணம் செய்தால் தோஷம் கழிந்துவிடும் எனவும் ஆசிரியையின் பெற்றோரிடம் ஆலோசனை தெரிவித்துள்ளார் ஒரு நபர்.

இதனையடுத்து ஆசிரியையிடம் டியூஷன் பயின்று வந்த 13 வயது மாணவர் ஒருவரை அந்த ஆசிரியை திருமணத்திற்காக தேர்ந்தெடுத்துள்ளார். மாணவரின் பெற்றோரிடம் பேசிய ஆசிரியை மாணவருக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்க வேண்டியிருப்பதால் ஒருவாரம் அவரது வீட்டிலேயே தங்க வேண்டும் என கோரியிருக்கிறார். இதனை ஏற்ற பெற்றோரும் மாணவரை தங்குவதற்கு அனுமதித்துள்ளனர்.

சட்டவிரோதமாக தங்கவைக்கப்பட்ட சிறுவனை கட்டாயப்படுத்தி ஆசிரியையும், அவரின் பெற்றோர்களும் திருமண சடங்குகள் செய்ததாகவும். இந்த திருமணத்தின் போது மெகந்தி வைபவம், முதலிரவு என அனைத்து சம்பிரதாயங்களும் கடைபிடிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் வளையல்களை உடைத்து திருமண பந்தம் முறிந்ததாகவும், திருமண முறிவு சம்பிரதாயங்கள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே ஆசிரியையின் வீட்டில் இருந்து மீண்டும் தனது வீட்டிற்கு சென்ற மாணவர் நடந்தவை குறித்து தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த மாணவரின் பெற்றோர் பஸ்தி பவா கேல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இருப்பினும் காவல்நிலைய புகார் குறித்து அறிந்த ஆசிரியையின் குடுப்பத்தினர், மாணவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் மாணவரின் பெற்றோர் கொடுத்த புகாரை திரும்பப் பெற்றதாகவும் தெரியவந்துள்ளது.

பஸ்தி பவா கேல் காவல்நிலைய அதிகாரி ககன் தீப் சிங் கேகோன் இந்த விவகாரம் குறித்து பேசுகையில், மாணவருடன் ஆசிரியை திருமணம் செய்தது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது, இருப்பினும் மாணவரின் பெற்றோர் புகாரை வாபஸ் பெற்று சென்றுவிட்டதாகவும் அவர் கூறினார், இருப்பினும் மூத்த காவல்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தை மிகவும் சீரியசாக எடுத்துக்கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதுவரை ஆசிரியை மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
Published by:Arun
First published: