தமிழகத்தில் இருந்து திருமலை திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகளுடன் கூடிய நிரந்தர விடுதிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, சென்னை தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு நேற்று வருகை புரிந்தார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழகம்-புதுச்சேரிக்கான உள்ளூர் ஆலோசனைக்குழு தலைவராக 2வது முறையாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.ஜெ.சேகர் ரெட்டியிடம், புதிய பொறுப்புக்கான பணி ஆணையை அவர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுப்பாரெட்டி, சென்னை தியாகராயநகரில் பத்மாவதி தாயார் கோவில் கட்டுமான பணி வேகமாக நடந்து வருவதாகவும் இந்த பணிகள் ஓராண்டில் நிறைவடைந்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இதேபோல், தமிழகத்தில் இருந்து நடைபயணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ஒவ்வொரு 20-30 கிலோ மீட்டரிலும் பல்வேறு வசதிகளுடன் கூடிய நிரந்தர தங்கும் விடுதி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இங்கு பக்தர்கள் தங்கி ஓய்வு எடுப்பதோடு சமைத்து உணவருந்திவிட்டு செல்லலாம். குளியலறை, கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அடுத்த புரட்டாசி மாதத்தித்திற்கு இவை அமைக்கப்படும் என்றும் சுப்பா ரெட்டி தெரிவித்தார்.
இதையும் படிங்க: தியேட்டர்களில் குடிநீர், கழிவறை வசதிகளை உறுதி செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மேலும், திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னையில் ஸ்ரீவாரி கோவில் கட்டுவதற்காக பழைய மகாபலிபுரம் சாலை அல்லது கிழக்கு கடற்கரை சாலையில் இடங்களை ஒதுக்கித் தர தமிழக அரசு சம்மதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். திருப்பதி திருமலை பொறியாளர்கள் இரு இடங்களிலும் உள்ள நிலங்களை ஆராய்ந்து, ஸ்ரீவாரி கோவிலுக்கு பொருத்தமான நிலப்பரப்பை முடிவு செய்து பூமி பூஜை செய்யப்பட்டு கோவில் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க: கொரோனாவில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு: அனுமதி வழங்கியது உச்ச நீதிமன்றம்!
ஏழை மத்தியதர மக்கள் பயன்பெறும் வகையில் சென்னை ராயபேட்டையில் 2 ஏக்கரில் திருமண மண்டபம் கட்டவும் தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளதாக சுப்பாரெட்டி கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.