இந்தியா அமெரிக்கா தொடர்பான வணிக ஒப்பந்தங்கள், ட்ரம்பின் பயணத்தின்போது கையெழுத்தாகாது என்றும் அதைக் காட்டிலும் முக்கிய சில ஒப்பந்தங்கள் முதலில் கையெழுத்தாக வேண்டியுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து, அமெரிக்காவை இந்தியா தொடர்ந்து தாக்குகிறது என்பதும் உலகிலேயே அதிக வரி விதிக்கிற நாடுகளுள் ஒன்றாக இந்தியா இருக்கிறது என்பதும் ட்ரம்ப் தொடர்ச்சியாக முன்வைக்கும் விமர்சனங்கள்.
ஏற்கனவே, 2018ஆம் ஆண்டில், இந்தியாவை அவர் வரி விதிப்பின் ராஜா என்று விமர்சனம் செய்திருந்தார். இந்தியா, அமெரிக்கா இடையேயான வரி தொடர்பான சிக்கல் இன்றும் தொடர்ந்து வருகிறது.
2018ஆம் ஆண்டில், அமெரிக்காவில் இருந்து இந்தியா பெற்ற சேவைகளின் மதிப்பு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 2 .45 லட்சம் கோடி. அதேபோல், இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட பொருட்களின் மதிப்பு 3.88 லட்சம் கோடி, சேவைகளின் மதிப்பு 2.16 லட்சம் கோடி.
அமெரிக்கா அதிக அளவில் பொருட்களையும் சேவைகளையும் பெறும் நாடுகளின் பட்டியலில், சீனாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. அதேபோல், வளரும் நாடுகளை ஊக்குவிக்கும் திட்டத்தில், வரியில்லாமல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் திட்டத்தில், இந்தியா 40 ஆயிரத்து 320 கோடி மதிப்பிலான பொருட்களை அமெரிக்காவிற்கு அனுப்புகிறது.
ஆனால் இந்தியா, அமெரிக்கர்களை இந்திய வணிகத்தில் அனுமதிக்க சம உரிமை வழங்குவதில்லை என்று அமெரிக்கா கண்டனம் தெரிவித்து வருகிறது. அத்தோடு, இந்தியாவும் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அமெரிக்கப் பொருட்களை வாங்க வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது.
Coronary stent மற்றும் மூட்டு அறுவை சிகிச்சைகான பொருட்களின் விலை மீது இந்திய அரசு கட்டுப்பாடு விதித்த உடன், இந்தியாவிற்கு வழங்கி இருந்த சிறப்பு வணிக அந்தஸ்தை அமெரிக்கா திரும்பப் பெற்றது. இதற்கு எதிர்வினையாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாம், தானியங்கள், வால்நட், ஆப்பிள் போன்றவற்றின் மீது இந்தியா வரி விதித்தது.
இந்தப் பிரச்னை ஒருபுறம் சென்று கொண்டிருக்க, அமெரிக்காவின் ’ஹார்லி டேவிட்சன்’ இருசக்கர வாகனங்கள் மீது இந்தியா அதிக வரி விதிப்பதாக ட்ரம்ப் குற்றம்சாட்டினார். அதன் பின்னர், அமெரிக்க இரு சக்கர வாகனங்கள் மீது இருந்த 100 சதவிதம் வரி 50 சதவிதமாகக் குறைக்கப்பட்டபோதும், இந்தியா அதிக வரி விதிப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவிற்கு ஸ்டீல் மற்றும் அலுமினியம் ஏற்றுமதி செய்வதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீலுக்கு 25 சதவிதமும் அலுமினியத்திற்கு 10 சதவிதமும் அமெரிக்கா வரி விதித்தது. இதனால் இந்தியாவிற்கு சுமார் ஆயிரத்து 700 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாம், வால்நட், தானியங்கள் உள்ளிட்ட 29 பொருட்கள் மீது மேலும் வரியை இந்தியா அதிகரித்தது. வால்நட் மீதான இறக்குமதி வரி 30 சதவிதத்தில் இருந்து 120 சதவிதமாகவும், பட்டாணி போன்றவற்றின் மீதான வரியை 30 சதவிதத்தில் இருந்து 70 சதவிதமாகவும் அதிகரித்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்தது இந்தியா..
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்திய பயணத்தின்போதும் இந்த வரி சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு எட்டப்படாது என தெரிகிறது. இதன் ஒரு பகுதியாகவே, அமெரிக்காவின் வணிகப் பிரதிநிதி Robert Lighthizer ட்ரம்புடன் இந்தியா வரவில்லை. முன்னதாக இந்தியா வருவதாக இருந்த நிலையில் அவரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Donald Trump, India, Modi, Trade, Trump India Visit, United States of America