இந்தியாவின் நம்பிக்கைக்கு உரிய நட்பு நாடாக அமெரிக்கா திகழும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அரசு முறை பயணமாக தனது மனைவியுடன் குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்தடைந்தார்.
தனது பிரத்யேக விமானத்தில் வந்தடைந்த அவரை, பிரதமர் மோடி, நேரில் சென்று வரவேற்றார். முப்படை வீரர்கள் அணிவகுப்பு, கண்கவர் கலை நிகழ்ச்சிகள் என டிரம்புக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரத்யேக கார் மூலம் டிரம்ப் அவரது மனைவி, பிரதமர் மோடி ஆகியோர் சமர்பதி ஆசிரமம் வந்தடைந்தனர். அங்கு ஆசிரமத்தை பார்வையிட்ட டிரம்ப், அங்கு நூல் நூற்றார்.
பின்னர், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொதேரா மைதானத்திற்கு சென்ற அவர், அங்கு நமஸ்தே டிரம்ப் என்ற பெயரிலான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
தனது பேச்சில் பிரதமர் மோடியை வெகுவாக அவர் புகழ்ந்தார். “எனது உண்மையான நண்பர் மோடி. எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்த நண்பர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்தியாவுக்காக பிரதமர் மோடி இரவு பகலாக உழைக்கிறார். இணையதள சேவை மற்றும் சமையல் எரிவாயு சேவையை இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்துள்ளார் மோடி. கடின உழைப்பால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணம் மோடி.
மனித குலத்திற்கே நம்பிக்கை அளிக்கிறது இந்தியா. இந்தியாவின் நம்பிக்கைக்கு உரிய நட்பு நாடாக அமெரிக்கா திகழும். 10 ஆண்டுகளில் 27 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நிமிடமும் 7 இந்தியர்கள் வறுமையில் இருந்து மீள்கின்றனர்.
இந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை குறைந்துள்ளது. அமெரிக்காவின் வளர்ச்சியில் பங்களிக்கும் குஜராத்தியர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்தியர்கள் தாங்கள் நினைத்ததை எப்படியும் அடைந்துவிடுவார்கள்” என்று டிரம்ப் பேசினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.