• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கடும் எதிர்ப்புக்கு மத்தியில் முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

கனிமொழி

கனிமொழி

நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு பெறுவதாக இருந்தது. ஆனால், பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற வேண்டியிருப்பதால், இந்தக் கூட்டத் தொடரை, அடுத்த மாதம் 7-ம் தேதிவரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மக்களவையில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் முத்தலாக் தடை மசோதா நிறைவேறியது. இதேபோல, மாநிலங்களவையில் தகவல் உரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டத் தொடர், அடுத்த மாதம் 7-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முத்தலாக் முறைக்கு தடைவிதிக்கும் மசோதாவை, மக்களவையில் மத்திய அரசு மீண்டும் தாக்கல் செய்தது. இதன் மீதான விவாதத்தை நேற்று தொடங்கி வைத்துப்படுத்திப் பேசிய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மதங்களைக் கடந்து அனைத்து பெண்களும் சட்டத்தின் பார்வையில் சமமானவர்கள் என்றார்.

முத்தலாக்கிற்கு எதிராக இதுவரை 345 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக எம்பி கனிமொழி, " இந்த சட்டத்தை இவ்வளவு அவசரமாக கொண்டுவர வேண்டிய கட்டாயம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

திமுகவின் சார்பில் முத்தலாக் தடை சட்டத்தின் மீது எதிர்ப்பையும், அதிருப்தியையும் தெரிவிக்கிறேன். இந்த மசோதாவை கொண்டு வர அரசு ஏன் அவசரம் காட்டுகிறது? ஏராளமான பிரச்னைகள் உள்ளன. பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லாமல் மசோதா நிறைவேற்றப்படுகிறது.

உங்கள் தேர்தல் அறிக்கை பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என்கிறது. இது பெண்களை பாதுகாக்கும் சட்டம் என்கிறீர்கள். இந்த விவாதத்தில் பெண்கள் பங்கேற்க வேண்டாமா? எங்களுக்கு எது நல்லது என எங்களிடம் கேளுங்கள். பெண்கள் உரிமையை பேசும் முன்பு, 33% இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுங்கள்

சாதி, மதத்தின் பெயரால் நடைபெறும் ஆணவக்கொலைகளுக்கு முடிவுகட்ட சட்டம் கொண்டு வாருங்கள். ஒவ்வொரு நாளும் காதலிப்பவர்கள் கொல்லப்படுவதாக செய்திகள் வருகின்றன. அதைத் தடுக்க என்ன சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒன்றுமில்லை.

இங்கு என்ன சுதந்திரம் இருக்கிறது என கேட்க விரும்புகிறேன். என்ன சாப்பிட வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்க முடிகிறதா? கும்பல் வன்முறையில் ஈடுபடுவரை தண்டிக்க சட்டம் கொண்டு வாருங்கள். இது போன்றவற்றுக்கே சட்டம் கொண்டு வருவது அவசிய அவசரமானது" என்றார்.

இதேபோல, காங்கிரஸ் சார்பில் பேசிய தமிழகத்தைச் சேர்ந்த ஜோதிமணி, பெண்கள் மத்தியில் பிரித்தாளும் சூழ்ச்சியை அரசு செயல்படுத்துவதாக குற்றம்சாட்டினார். இஸ்லாமிய பெண்களுக்கு எதிரான இந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்த மசோதா மீது, கடந்த முறை நடைபெற்ற விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் அன்வர் ராஜா, கடுமையான எதிர்ப்புகளை பதிவுசெய்தார்.

ஆனால், நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது, திடீர் திருப்பமாக முத்தலாக் சட்டத்துக்கு அதிமுக மக்களவை குழு தலைவர் ரவீந்திரநாத் ஆதரவு தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர்,” பெண்களுக்கு சமஉரிமை வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் உறுதியை காண்கிறேன். பாலினம் உள்ளிட்ட எந்த வகையிலும் குடிமகன்களிடம் பாகுபாடு என நமது அரசியல் சாசனம் கூறுகிறது. அந்த பிரிவை வலுப்படுத்தும் வகையில் இந்த சட்டத்திருத்தம் உள்ளது.

இது பெரும்பான்மை, சிறுபான்மை குறித்த விவகாரமில்லை. இது மனிதநேயம் பற்றியது. பெண்கள் உரிமை பற்றியது இந்த சட்டம் சாதி மத பாகுபாடின்றி அனைத்துப் பெண்களுக்கும் சம உரிமை வழங்கும்.

பெண்களுக்கு சமவாய்ப்புகளை வழங்கினால், அவர்கள் ஆண்களுக்கு நிகரான சாதனைகளை படைப்பார்கள். எனவே, இந்த சட்டத்தை நான் ஆதரிக்கிறேன்” என்று கூறினார்.

ஆனால், இந்த மசோதாவுக்கு திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்தன. தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மசோதாவுக்கு 303 பேர் ஆதரவும், 82 பேர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, தகவல் உரிமை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா, ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. இந்த மசோதாவின்படி, தகவல் ஆணையர்களின் பதவிக்காலம், ஊதியம் உள்ளிட்டவை குறித்து அரசே முடிவுசெய்ய அதிகாரம் வழங்கப்படுகிறது.

இந்த மசோதாவை, தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது. ஆனால், தேர்வுக் குழுவுக்கு அனுப்ப 75 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், 117 பேர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மசோதாவுக்கு பிஜு ஜனதாதளம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதனால், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது.

இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு பெறுவதாக இருந்தது. ஆனால், பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற வேண்டியிருப்பதால், இந்தக் கூட்டத் தொடரை, அடுத்த மாதம் 7-ம் தேதிவரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. இதனை மக்களவையில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அறிவித்தார்.

மேலும் படிக்க... அதிமுக ஆதரவோடு முத்தலாக் தடை மசோதா நிறைவேறியது

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: