ராமர்கோவிலுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் நன்கொடையளித்த ராஜஸ்தான் திருநங்கைகள்.. விரைவில் ராமராஜ்ஜியம் என நம்பிக்கை..

ராமர்கோவிலுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் நன்கொடையளித்த ராஜஸ்தான் திருநங்கைகள்.. விரைவில் ராமராஜ்ஜியம் என நம்பிக்கை..

ராஜஸ்தான் திருநங்கைகள் நன்கொடை

ராமர் கோவில் கட்டுவதற்காக ராஜஸ்தான் திருநங்கைகள் 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் நிதி திரட்டி நன்கொடையாக கொடுத்துள்ளனர்.

  • Share this:
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக, நாடு முழுவதும் இருந்து நன்கொடைகள் மற்றும் பொருட்கள் இந்து அமைப்பினரால் சேகரிக்கப்பட்டு வருகிறது. பொது மக்களும் தன்னார்வத்துடன் வந்து நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 20 திருநங்கைகள் பல்வேறு இடங்களில் நிதி திரட்டி சுமார் 10 லட்சத்துக்கும் மேல் ராமர்கோவில் கட்டட பணிக்காக நன்கொடை அளித்துள்ளனர். 

ராமரின் ஆசிர்வாதம் புராண காலங்களில் இருந்தே தங்களுக்கு இருப்பதாக தெரிவித்த அவர்கள், ராமர் கோவில் கட்டடப் பணிகள் மிகச்சிறப்பாக வருவதற்கு மேலும் தங்களால் இயன்ற நன்கொடைகளை பெற்று தருவோம் என கூறினர்.

மேவார் பகுதியைச் (Mewar) சேர்ந்த ரேகா பூஜி (Rekha buaji) என்ற திருநங்கை ராமர்கோவில் கட்டுவதற்காக 5,11,111 ரூபாயை நன்கொடையாக கொடுத்தார். இதுகுறித்து பேசிய அவர், "ராமர் கோவில் கட்டுவது என்பது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு. இதில் நாடு முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து தரப்பு மக்களும் பங்கெடுத்து தங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்க வேண்டும். 

ஒட்டு மொத்த நாடும் ஓரணியில் நின்று ராமர் கோவில் கட்டுவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். வளமான இந்தியா அமைய ராமபிரானின் ஆசி நிச்சயம் கிடைக்கும்" என நம்பிக்கை தெரிவித்தார். இதேபோல், பியோவார் பகுதியைச் சேர்ந்த கிரண்பாய் என்ற திருநங்கை 3,21,000 ரூபாயை ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கு நன்கொடையாக கொடுத்தார். விரைவில் ராம ராஜ்யம் இந்தியாவில் அமையும் என திருநங்கை கிரண்பாய் நம்பிக்கை தெரிவித்தார். ராஜமந்தைச் சேர்ந்த மம்தா, ஒரு லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்தார். தன்னைப்போலவே, அப்பகுதியில் வசிக்கும் மக்களும் ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கு நல்ல தொகையை நன்கொடையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். 

தொடர்ந்து பேசிய அவர், " ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கு நிதி திரட்டுவதற்கு என் இதயம் என்னை வழிநடத்தி செல்கிறது. திருமண விழாக்களில் ஆடிப்பாடி இதற்காக நிதி சேர்த்து வருகிறேன். ராமர் கோவில் கட்டுமானப் பணி தொடங்கும் என பேச்சு தொடங்கும்போது, ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக அளிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். தற்போது அதனை செய்துவிட்டேன்" என்றார். கும்கெர் (Kumher) பகுதியைச் சேர்ந்த ரியாகுமாரி (Riya Kumari) 1,01,000 ரூபாயை ராமர் கோவிலுக்காக நன்கொடையாக கொடுத்தார். ஆர்த்தி என்ற திருநங்கை 51,000 ரூபாய் நன்கொடை அளித்தார். அப்போது பேசிய அவர், ராமர்கோவில் தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்ததாக தெரிவித்தார்.
Published by:Sankaravadivoo G
First published: