ரயில்வே தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலுக்கு தேர்வர்கள் தீ வைத்து கொளுத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ரயில்வே வாரியமானது, ரயில்வே மண்டலங்களில் காலியாக உள்ள நிலைய மேலாளர், ஜூனியர் கிளார்க், ரயில் உதவியாளர் போன்ற பல்வேறு பிரிவுகளில் தொழில்நுட்பம் சாராத 35,000 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டிருந்தது. பின்னர் இந்த தேர்வு 2020 மார்ச் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் கொரோனா காரணமாக அந்த தேர்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
35,000 பணியிடங்களுக்காக 1.25 கோடி பேர் விண்ணப்பித்திருந்ததால் 2020 ஏப்ரல் - ஜூலை மாத காலகட்டத்தில் அந்த தேர்வை ஆன்லைன் வாயிலாக நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி CBT-1 எனும் அத்தேர்வு 133 ஷிப்டுகளாக 68 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டது. தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி 14 அன்று வெளியானது. தேர்வு முறையில் பிரச்னைகள் இருப்பதாக தேர்வு எழுதிய தேர்வர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளத்திலும் தங்களின் எதிர்ப்பை அவர்கள் வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர்.
Also read:
நோய்வாய்ப்பட்ட தாயாருக்கு மருந்து வாங்குவதாக சிறுமியை அழைத்துச் சென்று பலாத்காரம்!!
இந்நிலையில் பீகார் மாநிலம் கயா ரயில் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தேர்வர்கள் திடீரென வன்முறையில் இறங்கினர். கயா ரயில் நிலையத்தினுள் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்கள் மீது கல்லெறிந்தனர். இதில் ஒரு ரயிலுக்கு (Shramjeevi Express) தீ வைக்கப்பட்டது. தீ வைப்பு சம்வத்தில் சிக்கிய ரயில் தீக்கிரையானது. கயா ரயில் நிலையமும் அடித்து நொறுக்கப்பட்டது.
இதனிடையே தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு சுமூக தீர்வு காணப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
ரயில்வே உங்கள் சொத்து, தயவு செய்து அதை அழிக்க வேண்டாம் என்று மாணவர்களை கேட்டுக் கொள்கிறேன். உங்கள் பிரச்சனைகளை நாங்கள் தீர்ப்போம். தேர்வு முடிவுகள் வெளிப்படையாகவும் நியாயமாகவும் இருக்கும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.
பல்வேறு ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்களின் கீழ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தோல்வியடைந்தவர்களின் குறைகளை ஆராய அமைச்சகம் ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும், இருதரப்பு வாதங்களையும் கேட்டபின், மார்ச் 4ம் தேதிக்குள், ரயில்வே அமைச்சகத்திடம், குழு அறிக்கை சமர்ப்பிக்கும் என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
Also read: விளையாடச் சென்ற 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்த மைனர் சிறுவர்கள்!!
போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்ததாக வெளியான செய்திகளுக்கு பதிலளித்த அமைச்சர், சட்டம்-ஒழுங்கு என்பது மாநில கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று கூறினார். ஆனால் இந்த விவகாரம் விரைவில் தீர்க்கப்படுவதை உறுதி செய்வதற்காக அமைச்சகம் மாநிலங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, ரயில்வே பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது, போராட்டத்தின் போது காழ்ப்புணர்ச்சி காரணமாக சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் ரயில்வேயில் பணியமர்த்தப்படுவதற்கு தடை விதிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.