டெல்லியில் நவம்பர் 26ம் தேதி முதல் விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே 7 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் விவசாயிகள் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் ஒரு கட்டமாக டெல்லியின் 4 எல்லைகளை விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர்.
டிராக்டரில் ஏராளமான விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக சென்று வருகின்றனர். இதனால் ஷிங்கு எல்லையில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியின் கிழக்கு மற்றும் மேற்கு நுழைவு வாயிலாக கருதப்படும் எல்லைகளில் டிராக்டர் பேரணி நடைபெறுகிறது. வரும் 26ம் தேதி நடக்க உள்ள மிகப்பெரிய போராட்டத்தின் தொடக்கமாகவே பேரணி நடத்துவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ஹரியானாவில் இருந்து ஏராளமான விவசாயிகள் நொய்டா வரை சென்று திரும்ப திட்டமிட்டுள்ளனர். இதனால் சரக்கு வாகனங்கள், பொதுமக்களின் வாகனங்கள் என போக்குவரத்து ஸ்தம்பிக்கத் தொடங்கியுள்ளது. விவசாயிகளின் டிராக்டர் பேரணியை போலீசார் வீடியோ பதிவும் செய்து வருகின்றனர்.