ஒரே நாளில் நிகழும் வானியல் அதிசயம்! இந்தியாவில் காண முடியுமா?

முழு சந்திர கிரகணமும், சூப்பர் மூன் நிகழ்வும் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும்.

முழு சந்திர கிரகணமும், சூப்பர் மூன் நிகழ்வும் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும்.

  • Share this:
பரந்துவிரிந்த வானியல் பரப்பில் நாள்தோறும் ஓர் அதிசயம் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. மே 26ஆம் தேதியான இன்று சந்திர கிரகணமும், சூப்பர் மூன் எனப்படும் முழு நிலா மிகப்பெரியதாக தோன்றுவதும் அரங்கேறுகிறது. முழு சந்திர கிரகணமும், சூப்பர் மூன் நிகழ்வும் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும்.

'சூப்பர் மூன்' என்றால் என்ன?

புவியைச் சுற்றி நீள்வட்டப்பாதையில் சுற்றி வரும் நிலா, ஒவ்வொரு மாதமும் பூமிக்கு அருகில் வந்து செல்கிறது. இவ்வாறு பூமிக்கு அருகில் வரும் புள்ளியை 'Perigee' என வானியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பூமிக்கு அருகில் நிலா வரும்போது முழு நிலாவாக இருந்தால், அதனை சூப்பர் மூன் என வானியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த நாளில், வழக்கத்தை விட நிலா பெரியதாகவும், அதிக பிரகாசமான ஒளியையும் கொண்டிருக்கும் என நாசா தெரிவித்துள்ளது.

சூப்பர் மூன் என்பதை பிரபல ஜோதிடர் ரிச்சர்டு நோலே (Richard Nolle) 1979ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். அந்த ஆண்டில் இரண்டு முதல் நான்கு சூப்பர் மூன் நிகழ்வுகள் அரங்கேறியதாக கூறப்படுகிறது. இன்றைய நாளான மே 26ஆம் தேதி, நிலா வழக்கத்தை விட பூமிக்கு நெருக்கமாக 0.04 டிகிரி வரை தோன்றும் எனவும் நாசா கூறியுள்ளது.

'ப்ளட் மூன்' (Blood Moon) என்றால் என்ன?

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் ஒரே நேர்கோட்டில் பூமி வரும் நிகழ்வுதான் சந்திர கிரகணம். அப்போது பூமியின் நிழலில் நிலவு இருக்கும். பொதுவாக ஆண்டுக்கு 2 - 5 முறை சந்திர கிரகணம் நிகழும். முழு சந்திர கிரகணம் என்பது 3 ஆண்டுகளுக்கு 2 முறையாவது நிகழும். ஒரு முழுமையான சந்திர கிரகணத்தின் போது நிலவு பளிச்சென ரத்தச் சிவப்பு நிறத்தில் மிளிரும் என்பதால், அதை Blood Moon என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு முழு சந்திர கிரகணம்தான் வரும் மே 26ஆம் தேதியான இன்று நிகழ்கிறது.

மே 26ஆம் தேதி அரிய நிகழ்வு ஏன்?

சந்திர கிரகணமும், சூப்பர் மூன் நிகழ்வும் இருவேறு வானியல் நிகழ்வுகள், ஒரே நேரத்தில் பொதுவாக நிகழாது. ஆனால் இந்த முறை இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒன்றாக நிகழவிருப்பதால், இதனை ஓர் அரிய நிகழ்வு என நாசா கூறியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை பகுதி சந்திர கிரகணத்தை மட்டுமே பார்க்க முடியும். பிற்பகல் 3.15 மணி முதல் மாலை 6.22 மணி வரை சந்திர கிரகணம் நிகழும். மாலை 4.41 முதல் 4.56 வரையான 15 நிமிடங்கள் முழு சந்திர கிரகணம் நிகழும். கிரகணத்தின் போது இந்தியாவைப் பொறுத்த வரை, நிலவு கிழக்கு அடிவானத்தின் கீழே இருக்கும் என்பதால், Super Blood Moon-ஐ பார்க்க முடியாது. சென்னையில் மாலை 6.32 மணிக்கு நிலவு தோன்றும். அதற்குள் கிரகணம் நிறைவடைந்துவிடும். கொல்கத்தா போன்ற வடகிழக்கு பகுதிகளில் மாலை 6.14 மணியளவில் நிலவு தோன்றும் என்பதால், பகுதி கிரகணத்தை சில நிமிடங்கள் மட்டும் பார்க்க முடியும்.

வெளிநாடுகளைப் பொறுத்தவரையில், மேற்கு அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, பெரும்பாலான மத்திய அமெரிக்கா ஆசிய பசிஃபிக் ரிம் பகுதியில் இருப்பவர்கள், ஈவடார், மேற்கு பெரு, தெற்கு சிலி, அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் இருப்பவர்கள் இந்த முழுமையான சந்திர கிரகணத்தையும், சூப்பர் ப்ளட் மூனையும் காணலாம்.
Published by:Archana R
First published: