பருவநிலை மாற்றம், நிலச்சரிவு.... உத்தரகண்ட் பேரழிவுக்கு என்ன காரணம்

உத்தரகண்ட்

பனிப்பாறை வெடிப்பதற்கு என்ன காரணம்? என்ற கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் நிபுணர்கள் திணறி வருகின்றனர். காலநிலை மாற்றம், மனித நடவடிக்கைகள் மற்றும் கதிரியக்க பொருட்கள் என பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

  • Share this:
இமயமலை பிராந்தியத்தில் அமைந்துள்ள உத்தரகண்ட் மாநிலத்தில், நந்தாதேவி மலைச் சிகரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பனிப்பாறை வெடித்து பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் அலெக்நந்தா மற்றும் தவுலிகங்கா ஆறுகளில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையம் சிதைந்ததால் அங்கு பணியாற்றிய 125-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், வெள்ளத்தில் சிக்கி பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 174 பேர் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளன. 

இதனிடையே பனிப்பாறை வெடிப்பதற்கு என்ன காரணம்? என்ற கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் நிபுணர்கள் திணறி வருகின்றனர். காலநிலை மாற்றம், மனித நடவடிக்கைகள் மற்றும் கதிரியக்க பொருட்கள் என பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை நாம் இங்கு தெரிந்து கொள்வோம்., 

பருவநிலை மாற்றம் 

உத்தரகண்டில் நடந்த பனிப்பாறை வெடிப்பு அரிதான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. பல வல்லுநர்கள் இது காலநிலை மாற்றத்தின் காரணமாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். இதுகுறித்து ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸின் ஆராய்ச்சி இயக்குநரும், இணை பேராசிரியருமான அஞ்சல் பிரகாஷ், ”இது ஒரு காலநிலை மாற்ற நிகழ்வு போலவே தோன்றுகிறது. ஆனால் இதுகுறித்து மேலும் ஆய்வுகள் தேவைப்படுகிறது. இந்த கொடூர சம்பவம் நடைபெற்ற பகுதியில் வானிலை அறிக்கைகள் இன்று வரை வெயில் காலநிலையைக் காட்டுவதால் இது மேகமூட்டம் காரணமாக நடைபெற வாய்ப்பில்லை. இந்த பனிப்­பாறை வெடிப்பு ஏற்­பட்டு உடைந்­தது வித்­தி­யா­ச­மாக உள்­ளது” என்று தெரிவித்தார். 

பனிப்பாறை வெடிப்பு வெள்ளம் (GLOF)

பனிப்பாறைகள் உருகும் போது, பனிப்பாறைகள், பனி, கற்கள், மண் மற்றும் கூழாங்கற்களால் ஆன க்ளாசியல் அல்லது மொரைன் அணைகளை தளர்வாக்குகிறது. GLOFs என்பது இது போன்ற தளர்வான அணைகளில் இருந்து திடீரென ஏற்படும் வெள்ளப்பெருக்கினையே குறிப்பிடுகிறது. நாம் வாழக்கூடிய பகுதிகளில் கட்டப்படும் அணைகள் போல் இல்லாமல், மொரைன் அணைகள் பலவீனமாக இருப்பதால் பனிப்பாறை ஏரியின் தோல்விக்கு வழி வகுக்கிறது. இது அதிக அளவு நீரை வெளியேற்றுகிறது. இது போன்ற அணைகள் சேதம் அடைவதால் மில்லியன்கணக்கில் க்யூபிக் மீட்டர்கள் நீரை குறைந்த நேரத்தில் வெளியேற்றும். இது கீழே இருக்கும் பகுதியில் அளவுக்கு அதிகமான வெள்ளப்பெருக்கிற்கு வழி வகை செய்யும்.    

பனிப்பாறை வெடிப்பு 

பொதுவாக பனிப்பாறைகள் உருகும் போது இயற்கையான முறையில் நீர் தேக்கங்கள் உருவாகின்றன. இவற்றை பனி ஏரிகள் என்று அழைக்கின்றனர். இந்த பனி ஏரிகள் செங்குத்தான பகுதிகளிலும் நிலைத்தன்மையற்ற மலைச்சரிவுகளுக்கு அருகிலும் உருவாகின்றன. இவற்றுக்கு வலுவான கரைகள் இருக்காது என்பதால் எப்போது வேண்டுமானாலும் உடையலாம். திடீரென ஏற்படும் அழுத்தம், பனிச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் இந்த பனி ஏரிகள் உடைந்து அதிகளவிலான நீர் வெளியேறுகிறது. அப்படிப்பட்ட நிகழ்வு தான் உத்தராகண்டில் நிகழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது. 

கதிரியக்கத்தன்மை

உத்தரகாண்டில் அதிகபட்ச சேதத்தை சந்தித்த பகுதிகளில் ஒன்றான ரெய்னி கிராமத்தில் வசிப்பவர்கள் பனியில் புதைக்கப்பட்ட கதிரியக்க சாதனம் காரணமாக இந்த பேரழிவு ஏற்பட்டதாக கூறுகின்றனர். டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான ஒரு அறிக்கையின்படி, இந்திய இராணுவம் 1965-ம் ஆண்டில் அணுசக்தியால் இயங்கும் கண்காணிப்பு சாதனத்தை தற்போது பேரிடர் நடைபெற்ற பகுதியில் வைத்துள்ளனர். ஆனால் பனிப்புயல் காரணமாக அந்த சாதனம் பனியில் புதைந்து விட்டது. இந்த சாதனம் மீட்டெடுக்கப்படாமல் அப்படியே விட்ட நிலையில், தற்போது இந்த சாதனத்தால் பனி வெடிப்பு நேர்ந்திருக்கும் என கூறுகின்றனர். 

நிலச்சரிவு

செயற்கைக்கோள் படங்களிலிருந்து தகவல் சேகரித்த விஞ்ஞானிகள், ஃபிளாஷ் வெள்ளத்திற்கு காரணம் பனிப்பாறை வெடிப்பு அல்லது GLOF அல்ல. ஆனால் நிலச்சரிவாக இருக்கலாம் என தெரிவிக்கின்றனர். செயற்கைக்கோள் படங்களில் காட்டப்பட்டுள்ள பகுதியில் ஒரு பனிப்பாறை ஏரியின் தடயங்கள் எதுவும் இல்லை என்பதால் இது நிலச்சரிவாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். மற்றொரு தகவலின் படி,  பனிப்பாறையின் செங்குத்தான, தொங்கும் நுனியை உடைத்ததன் காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம் என கூறுகின்றனர். உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என்று பலர் கருதுகின்றனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ram Sankar
First published: