இந்திய தயாரிப்பு தடுப்பூசி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு பயன்பெற்று வருகிறது என பட்ஜெட் உரையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
2022-23ம் நிதியாண்டுக்கான 17வது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கூட்டத் தொடரின் முதல் பகுதி பிப். 11ம் தேதி வரையும், அடுத்த கூட்டம் மார்ச் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறுகிறது.
மாநிலங்களவை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் செயல்படும். தொடக்க நாளான இன்று, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வார்.
நாளை பிப்.1ம் தேதி காலை 11 மணிக்கு 2022-23ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை (காகிதம் இல்லாத வகையில் டிஜிட்டல் முறையில்) நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார். அதற்கடுத்த நாளான பிப். 2ம் தேதி முதல் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும். இறுதியில் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் பிரதமர் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறும்.
இந்த நிலையில் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்தார். நேதாஜி 125-வது ஆண்டு பிறந்தநாளை மத்திய அரசு சிறப்பாக கொண்டாடியதாக தெரிவித்தார்.
கொரோனா 3-வது அலைக்கு எதிராக இந்தியா போராடி வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி இயக்கம் நாடு முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சிறப்பாக நடைபெறுகிறது.
India's capability in fight against #COVID19 was evident in vaccination program. In less than a yr, we made a record of administering over 150 cr doses of vaccine. Today,we're one of the leading nations of the world in terms of administering the maximum number of doses: President pic.twitter.com/TwyMzK53xo
கொரோனாவை அழிப்பதில் இந்திய தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டின் 75% மக்களுக்கு 2 தவணை தடுப்பூசிகளும் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களில் 90% பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவின் மருந்து தயாரிப்பு நிறுவனம் மூலம் 180 நாடுகள் பயன்பெற்று வருகின்றன.
இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது .
டாக்டர் அம்பேத்கர் தனது இலட்சிய சமுதாயம் சுதந்திரம், சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கூறினார். ஜனநாயகம் என்பது அரசாங்கத்தின் ஒரு வடிவம் மட்டுமல்ல, மக்களுக்கான மரியாதை உணர்வுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. எனது அரசாங்கம் அம்பேத்கரின் கொள்கைகளை அதன் வழிகாட்டும் கொள்கையாகக் கருதுகிறது.
யாரும் பசியுடன் வீடு திரும்பக்கூடாது என்பதற்காக, ஏழைகளுக்கு இலவச உணவு பொருள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது . இன்று இந்தியா உலகின் மிகப்பெரிய உணவு விநியோக திட்டத்தை நடத்தி வருகிறது; அந்த திட்டம் மார்ச் 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.