Budget 2021: பட்ஜெட் இன்று தாக்கல்... எதிர்பார்ப்புகள் என்னென்ன?

Budget 2021: பட்ஜெட் இன்று தாக்கல்... எதிர்பார்ப்புகள் என்னென்ன?

Budget 2021-22:

இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

  • Share this:
இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில், கடந்த ஆண்டுகளில் சில முக்கிய துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன.

கொரோனாவால் ஏற்பட்ட தாக்கத்தால், இந்தியாவின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து, தற்போது மீண்டுவரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இன்று தாக்கல் செய்யப்படும் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், கடந்த ஆண்டுகளைப் போல, நிதி ஒதுக்கீடுகள் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியாவின் நிதி பற்றாக்குறை இந்த ஆண்டு 2 மடங்காக அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது, 2015-16-ம் ஆண்டு, இந்தியாவின் நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.9 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஆண்டுகளில் சற்று ஏறக்குறைய இருந்தாலும், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, 7 சதவீதத்திற்கும் மேல் செல்லலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எளிதாக தொழில் தொடங்க அனுமதிக்கும் நாடுகளின் பட்டியலில், 2014-ம் ஆண்டு 142-வது இடத்தில் இருந்த இந்தியா, கடந்த ஆண்டில் 63-வது இடத்திற்கு முன்னேறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தொழில் செய்வதில் இருந்த நெருக்கடிகள் நீங்கவில்லை என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

2014-15-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டின் மொத்த அளவு, 17 லட்சத்து 94 ஆயிரம் கோடி, இது படிப்படியாக அதிகரித்து 2020-21ம் ஆண்டில் 30 லட்சத்து 42 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. 6 ஆண்டுகளில் பட்ஜெட்டின் அளவு ஏறக்குறைய 12 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

விவசாயத் துறைக்கு 2015-16ம் ஆண்டு 22 ஆயிரத்து 958 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது, இது 2018-19-ம் ஆண்டு பட்ஜெட்டில், 57 ஆயிரத்து 600 கோடியாக அதிகரித்தது. கடந்த ஆண்டு வெளியான பட்ஜெட்டில், வேளாண் துறைக்கு 2 லட்சத்து 83 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்வதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

பாதுகாப்புத் துறைக்கு 2014-15ம் ஆண்டு 2 லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது, இது தொடர்ந்து அதிகரித்து, நடப்பு நிதிஆண்டில் 4 லட்சத்து 71 ஆயிரம் கோடியாக அதிகரித்தது.கல்வித் துறையைப் பொறுத்தவரை 2015-16-ம் ஆண்டு 68 ஆயிரத்து 963 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது, இது நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், 99ஆயிரத்து 300 கோடியாக அதிகரித்தது.

ரயில்வே துறைக்கு 2015-16ம் ஆண்டு ஒரு லட்சம் கோடியாக இருந்த ஒதுக்கீடு, 2018-19ல் ஒரு லட்சத்து 48 ஆயிரம் கோடியாக அதிகரித்தது. 2020-21 பட்ஜெட்டில் 2 லட்சத்து 19 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மானியங்களுக்கான ஒதுக்கீடு தொடர்ந்து அதிகரிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு குறைக்கப்பட்டது. 2015-16-ம் ஆண்டு மானிங்களுக்கு என்று 2 லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இது 2018-19ம் ஆண்டில் 2 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்தது. பின்னர் 2020-21ம் ஆண்டு பட்ஜெட்டில் இது 2 லட்சத்து 28 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டது. தற்போதைய நிலையில், இந்த ஆண்டும் பெரும்பாலான துறைகளில், நிதி ஒதுக்கீடு குறைய வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

மேலும் படிக்க.... பட்ஜெட் 2021 : வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்படுமா? கடந்த ஆண்டுகளில் எந்த அளவுக்கு மாற்றம்?

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்...
Published by:Suresh V
First published: