வெள்ள சேதத்துக்கு தமிழகம் காரணம்: உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு புகார்

கோப்புப் படம்

 • News18
 • Last Updated :
 • Share this:
  முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க கோரிய வழக்கில், கேரள அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் அதிக அளவில் தண்ணீரை தமிழகம் திறந்துவிட்டது வெள்ளசேதத்திற்கு ஒரு காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. 

  கேரளாவில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக  ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு. இதனால்  கேரள மாநிலமே வெள்ளக்காடாக மாறியது. அந்த மாநிலத்தில் உள்ள பெரிய அணையான இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுதான் நிரம்பியது.
  மேலும் முல்லைப்பெரியாறு அணையும் நிரம்பியதால், அதில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீரும் இடுக்கி அணைக்கு சென்றது.

  இதனால் இடுக்கி அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், இடுக்கி மாவட்டத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முல்லைப்பெரியாறு அணை யில் 142 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்கி வைக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது. அதன்படி, நீர்மட்டம் 142 அடியை எட்டியதும், அணையில் இருந்து உபரி நீரை தமிழகம் திறந்து விட்டது.

  இதற்கிடையே, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு கருதி, அதன் உச்ச நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க உத்தரவிடக் கோரி, ஜாய் ரஸ்ஸல் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 17-ந் தேதி விசாரணைக்கு வந்தது.

  அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கேரளாவில் மேற்கொள்ளப்படும் மீட்புப்பணிகள், புனரமைப்பு பணிகள், மக்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் குறித்து அந்த மாநில தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 24-ந் தேதிக்கு  ஒத்திவைத்தனர்.

  இந்தநிலையில், கேரள அரசின் தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில்,

  "ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் நிகழ்ந்த பெருவெள்ளத்தால் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி அதிகமாகவும், அணையில் நீரை தேக்கி வைக்கும் திறன் குறைவாகவும் உள்ளது.

  அணைக்கு நீர்வரத்து அதிகமானதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்குமாறு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு அதை ஏற்கவில்லை.

  கடந்த 15-ந் தேதி நள்ளிரவில் முல்லைப்பெரியாறு அணையின் மதகுகள் மூலம் திடீரென்று இடுக்கி அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் இடுக்கி அணையில் இருந்தும் நீர் திறந்து விட வேண்டிய கட்டாயத்துக்கு கேரள அரசு உள்ளானது. இதன் காரணமாக கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டது.

  முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டிய உடனேயே, தமிழகம் கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீரை திறந்து விட்டு இருந்தால் இவ்வளவு சேதம் ஏற்பட்டு இருக்காது. வெள்ளசேதம் ஏற்பட்டதற்கு தமிழகம் திடீரென்று தண்ணீரை திறந்துவிட்டதும் ஒரு காரணம் ஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
  Published by:SPDakshina Murthy
  First published: