பாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் வேட்பாளர்!

பாஜகவில் இணையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் வேட்பாளர்!

சரளா முர்மு.

மேற்குவங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள Habibpur தொகுதியின் திரினாமுல் காங்கிரஸின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் சரளா முர்மு.

  • Share this:
மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மூன்றே நாட்களில் பெண் வேட்பாளர் ஒருவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

8 கட்டங்களாக நடைபெற உள்ள மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ், பாஜக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் தேர்தல் களம் சூடேறியிருக்கிறது. ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸிலிருந்து தலைவர்கள் வரிசையாக விலகி பாஜகவில் இணைந்து வருவது தொடர்கதையாகிவிட்ட நிலையில், தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒருவர் பாஜகவில் இணைய இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் மமதா பானர்ஜியை அதிருப்திக்கு ஆளாக்கி உள்ளது.

மேற்குவங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள Habibpur தொகுதியின் திரினாமுல் காங்கிரஸின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் சரளா முர்மு. மால்டா தொகுதியில் போட்டியிடுவதில் ஆர்வமாக இருந்த சரளாவுக்கு Habibpur தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சரளா திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இன்று இணைவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சரளா முர்முக்கு பதிலாக Habibpur தொகுதியின் வேட்பாளராக Pradeep Baskey மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. உடல்நலக் காரணங்களால் சரளா முர்மு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக 291 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டது. இதில் 50 பெண்கள், மலைவாழ் மக்கள் 17 பேர், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் 79 பேர், இஸ்லாமியர்கள் 42 பேரும் அடங்குவர். தற்போது எம்.எல்.ஏக்களாக உள்ள 27 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவர் ஒருவர் இந்த விவகாரம் தொடர்பாக பேசுகையில், கட்சி ஒருவரின் வெற்றியை கணக்கிட்டே வேட்பாளரை அறிவிக்கிறது. அவர்களின் விருப்பு வெறுப்புகளை கணக்கிடுவதில்லை என காட்டமாக தெரிவித்தார்.

திரிணாமுல் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு கட்சி மாறுவோரில் வேட்பாளர் ஒருவர் கட்சி மாறுவது இதுவே முதல் முறையாகும்.
Published by:Arun
First published: