திரிணாமுல் காங்கிரஸில் இருந்து பெண் எம்.எல்.ஏ நீக்கம்: கட்சியின் தலைமைக்கு எதிராக பேசியதாக ஒழுங்காற்று குழு நடவடிக்கை

எம்.எல்.ஏ பைசாலி டால்மியா

மம்தாவிற்கு எதிராகவும், தேர்தல் வியூக நிபுணரான பிரஷாந்த் கிஷோர் தொடர்பாகவும் அண்மையில் பொதுவெளியில் விமர்சித்ததாக கூறப்படுகிறது,

  • Share this:
மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மிகவும் வலிமையான ஒரு தலைவராக பார்க்கப்படுபவர். ஒரு காலத்தில் இடதுசாரிகளின் கோட்டையாக திகழ்ந்த இம்மாநிலத்தில் 34 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த இடதுசாரிகளை அகற்றி விட்டு திரிணாமுல் காங்கிரஸை ஆட்சியில் அமர வைத்ததால் இரும்புப் பெண்மணியாக வர்ணிக்கப்படுகிறார். அவ்வாறான மம்தாவுக்கு தற்போது போதாத காலமாக மாறியுள்ளது.

2019ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அக்கட்சி கடும் சரிவை சந்தித்தது. மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸுக்கு போட்டியாக வலிமையான கட்சியாக பாஜக அசுர வளர்ச்சியை பெற்றது. அப்போதிலிருந்தே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தலைமைக்கு எதிரான கருத்துக்களை பொதுவெளியில் பகிரங்கமாக தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் அடுத்த சில மாதங்களில் மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், உட்பட 40க்கும் மேற்பட்ட முக்கியத் தலைவர்கள் ஆளும் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

இதுவரை 3 அமைச்சர்கள், 15 எம்.எல்.ஏக்கள் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று வனத்துறை அமைச்சராக இருந்த ரஜீப் பானர்ஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கண்ணீர் மல்க கட்சியின் தலைமைக்கு எதிராக தான் அனுபவித்த இன்னல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எம்.எல்.ஏ பைசாலி டால்மியா


ரஜீப் பானர்ஜி விலகிய சில மணி நேரங்களிலேயே பெண் எம்.எல்.ஏவான பைசாலி டால்மியாவை கட்சியில் இருந்து நீக்குவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. கட்சித் தலைமைக்கு எதிராக பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஒழுங்காற்று குழு தெரிவித்துள்ளது.

இவர் மம்தாவிற்கு எதிராகவும், தேர்தல் வியூக நிபுணரான பிரஷாந்த் கிஷோர் தொடர்பாகவும் அண்மையில் பொதுவெளியில் விமர்சித்ததாக கூறப்படுகிறது,

கட்சியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக எம்.எல்.ஏ பைசாலி டால்மியா கூறுகையில், “நான் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது குறித்து எழுத்துப்பூர்வமாக கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. செய்தி சேனல்கள் மூலம் தான் தெரிந்து கொண்டேன். கட்சியின் இயக்க முறைமை எனக்கு புரியவில்லை. பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக நான் அரசியலில் சேர்ந்தேன், அதனை தொடர்ந்து செய்வேன்’ என்று தெரிவித்துள்ளார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Arun
First published: