ஹோம் /நியூஸ் /இந்தியா /

கோவிந்தா... திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க பிளாக்கில் டிக்கெட் விற்பனை படுஜோர்...

கோவிந்தா... திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க பிளாக்கில் டிக்கெட் விற்பனை படுஜோர்...

திருப்பதி கோவில்

திருப்பதி கோவில்

திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட்கள் கள்ளசந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tirupati, India

  திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட்கள் டெலிகிராம் குரூப் மூலம் கூவி, கூவி கள்ள மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  திருப்பதி ஏழுமலையானை வழிபட விரும்பும் சாதாரண பக்தர்கள் மாதக்கணக்கில் காத்திருந்து ஆன்லைனில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வெளியிடப்பட்ட பின் ஓரிரு மணி நேரத்திற்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும், அல்லது திருப்பதி மலைக்கு நேரடியாகச் சென்று நாள் கணக்கில் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டும்.

  சற்று வசதி வாய்ப்பு, செல்வாக்கு ஆகியவை உள்ள பக்தர்களாக இருந்தால் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், நாடு முழுவதும் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்,தேவஸ்தான அறங்காவலர் குழுவினர் ஆகியோரின் பரிந்துரை அடிப்படையில் விஐபி பிரேக தரிசன டிக்கெட் அல்லது 300 ரூபாய் தரிசன டிக்கெட் பெற்று எளிதாக ஏழுமலையானை வழிபடலாம். இது எதுவுமே எனக்குத் தேவையில்லை. என்னிடம் பணம் இருக்கிறது என்று கருதினால் 10 ஆயிரத்து 500 ரூபாய் கொடுத்தால் நேரடியாக விஐபி தரிசன டிக்கெட் வாங்கி சாமி கும்பிடலாம்.

  ஆந்திரா,தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய மாநில சுற்றுலா கழகங்கள், இந்திய சுற்றுலா அபிவிருத்தி துறை ஆகியவற்றிற்கும், ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகத்திற்கும் நாளொன்றுக்குக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வழங்குகிறது. அவற்றைப் பயன்படுத்தி அபிவிருத்தி கழகங்கள், ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகம் ஆகியவை தங்களுடைய வியாபாரத்தை அபிவிருத்தி செய்து கொள்கின்றன.

  வேறு எந்த வழியிலும் கிடைக்காத இந்த டிக்கெட்டுகளை ஒரு சிலர் டெலிகிராமில் குழு ஒன்றை ஏற்படுத்திக் கூவி,கூவி கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். 300 ரூபாய் டிக்கெட்டுகளை அதிகபட்சமாக ஆயிரத்து 500 ரூபாய் வரையில் டெலிகிராம் குரூப் மூலம் விற்பனை செய்கின்றனர்.

  இது தவிர விஐபி பிரேக் தரிசனம், கட்டண சேவை டிக்கட்டுகள்  தேவை என்று கேட்டால் கால் மீ என்று மெசேஜ் செய்கின்றனர். அப்போது நடைபெறும் உரையாடலின் போது விஐபி பிரேக் தரிசனம், கட்டண சேவை டிக்கட்டுகள் ஆகியவற்றுக்கு ஆயிரக்கணக்கில் அவர்கள் பண வசூல் செய்வதாகத் தெரியவந்துள்ளது.

  Also Read : ’பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவதே தீபாவளி’ - ராணுவ வீரர்களுடன் பண்டிகையை கொண்டாடிய மோடி பேச்சு!

  இது தவிரத் திருப்பதி மலையில் பல்வேறு வசதிகளையும் அவர்கள் செய்து கொடுப்பதாக திருமலா தரிசனம் டிக்கெட்ஸ் என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ள டெலிகிராம் குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள் மூலம் தெரிய வருகிறது. சாதாரண பக்தர்கள் கூடுதலாக ஒரே ஒரு டிக்கெட் கேட்டால் கூட தேவஸ்தான நிர்வாகம் கொடுக்க மறுக்கிறது.

  ஆனால் இது போன்றவர்கள்டெலிகிராம் குழு அமைத்து கள்ள மார்க்கெட்டில் ஏழுமலையான் தரிசன பிக்கெட்டுகளை கூவி, கூவி விற்பனை செய்கின்றனர். டெலிகிராமில் குழு அமைத்து தரிசன டிக்கெட்களை கள்ள மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் இந்த பிரபல வியாபாரியைத் தொடர்பு கொள்ள முயன்றால் சுவிட்ச் ஆப் என்ற தகவல் வருகிறது.

  செய்தியாளர்: புஷ்பராஜ்- திருப்பதி

  Published by:Janvi
  First published:

  Tags: Ticket booking, Tirupathi, Tirupati temple