ஆந்திர மாநிலம், ஸ்ரீகாளஹஸ்தி கோவில் நாட்டிலேயே பிரசித்தி பெற்ற பரிகார சிவ ஸ்தலமாக விளங்கி வருகிறது. சைவ ஷேத்திரங்களில் ஒன்றான இக்கோவில் ராகு கேது பரிகார பூஜைக்கு புகழ் பெற்ற ஸ்தலமாகும். தோஷம் நீங்குவதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் பரிகாரம் செய்து வருகின்றனர். கோவிலுக்குள் கேமரா செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் உபகரணங்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.
இந்நிலையில் 10 நாட்களுக்கு முன்பு தெலுங்கில் பிரபலமாக இருக்கும் யூடியூபரும், பாடகியுமான மங்லி குழுவினரின் படப்பிடிப்பு கோவிலுக்குள் நடந்துள்ளது. அதிகாலை நேரத்தில் நாட்டியத்துடன் கூடிய 'பம்பம் போலே' (bam bam bhole) என்ற பாடலின் படப்பிடிப்பு கோவிலுக்குள் நடைபெற்றுள்ளது. கோவிலில் உள்ள காலபைரவர் சன்னதி, ஞானபிரசன்னாம்பிகை தாயார் சன்னதி, ஸ்படிகலிங்கம் சன்னதி, ராகு கேது பரிகார பூஜை மண்டபம், ஊஞ்சல் சேவை மண்டபம் உட்பட பல்வேறு முக்கிய இடங்களில் மங்லியின் நாட்டிய படபிடிப்பு நடைபெற்றது.
இந்த பாடல் காட்சிகள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது. பல்வேறு நாடுகளில் வசிக்கும் சிவ பக்தர்கள் இந்த பாடலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆகம விதிகளின்படி கோவிலுக்குள் கேமரா, செல்போன் உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்தப் பாடல் காட்சியை படமாக்கியது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளனர். கருவறைக்குள் செல்வதற்கு அர்ச்சகர்களுக்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையில் சிவன் சிலைக்கு அபிஷேகம் செய்வது, பூஜைகள் செய்வது படமாக்கப்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு யூடியூபர் தன்னுடைய வியாபாரத்திற்காக மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலுக்குள் படப்பிடிப்பை நடத்தியது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த பாடலை படமாக்க தேவஸ்தான அதிகாரிகள் எப்படி அனுமதி வழங்கினார்கள் என்பது பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Temple