திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் மானியம் ரத்து செய்யப்படுவதால் லட்டு விலை உயரும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதிக்குச் செல்வோர் மொட்டை போடுகிறார்களோ இல்லையோ லட்டை கண்டிப்பாக வாங்கி வருவார்கள். அப்படி வாங்கும் லட்டுகளை பக்கத்து வீட்டுக்காரர், உறவினர்களுக்கும் பகிர்ந்து அளிப்பார்கள். இப்படி தாராளமாக வாங்கிச் சென்ற லட்டு தற்போது 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
காரணம் தேவஸ்தானம் ஒரு லட்டு தயாரிக்க 38 ரூபாய் செலவு செய்கிறது. அதில் நடைபயணமாக மலையேறி தரிசனம் செய்வோருக்கு ஒரு லட்டு இலவசமாகவும், தர்ம தரிசனம் செய்வோருக்கும், மலையேறிச் செல்லும் பக்தர்களுக்கும் 10 ரூபாய்க்கு 2 லட்டுகளும் கூடுதலாக 2 லட்டுகள் பெற 25 ரூபாய் என்றும் விற்பனை செய்கிறது. அதேபோல் 300 ரூ கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசனம் செய்வோர், விஐபி பிரேக் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு இரண்டு லட்டுகள் இலவசமாகவும் வழங்கப்படுகிறது.
இதுமட்டுமன்றி தனி மையங்கள் அமைத்து 50 ரூபாக்கும் லட்டு விற்பனை செய்கிறது. இதில்தான் தேவஸ்தானம் சற்று லாபத்தை பார்க்கிறது.
ஆனால், இனிமேல் திருப்பதிக்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் அனைவருக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. அதேபோல் கூடுதல் லட்டு வாங்க 50 ரூபாய் கொடுத்து ஒரு லட்டு வாங்கிக்கொள்ளலாம். இது வரும் வைகுண்ட ஏகாதசி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இனி ஒரு லட்டு 10 ரூபாய்க்கு, 25 ரூபாய்க்கு என்றெல்லாம் கிடையாது. இனி அனைவருக்கும் ஒரு லட்டு 50 ரூபாய் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வால் லட்டுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் முழுவதும் ரத்து செய்யப்படவுள்ளது.
இந்த விலை உயர்வால் தேவஸ்தானத்திற்கு ஆண்டுக்கு 400 முதல் 450 கோடி லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tirupati laddu