திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பயிற்சி அரங்கில் இரண்டு நாட்கள் தேவஸ்தானத்தின் செயல்பாடுகளை பற்றிய பத்திரிகையாளர்களுக்கான பயிற்சி நேற்றும் இன்றும் நடைபெற்றது. நிகழ்ச்சியை தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி துவக்கி வைத்தார்.
அப்போது தொடர்ந்து பேசிய தேவஸ்தான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு துறை தலைமை அதிகாரி நரசிம்ம கிஷோர் ஏழுமலையான் கோவிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து வருகிறது என்றும் எனவே திருப்பதி மலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக திருப்பதி மலை முழுவதும் நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் பக்தர்கள், பொதுமக்கள் ஆகியோரின் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசியவர், பக்தர்களின் பாதுகாப்பிற்காக திருப்பதி திருமலை இடையே பயணிக்கும் வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
திருப்பதி மலைப்பாதையில் உள்ள நுழைவு வாயிலில் வாகனங்கள் நுழையும்போது அவற்றின் நம்பர் பிளேட்டுகள் ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்யப்படுகின்றன. அதேபோல் அவை திருமலை அடைந்தவுடன் மீண்டும் ஸ்கேன் செய்யப்படுகின்றன. அப்போது குறிப்பிட்ட அந்த வாகனம் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் திருமலை திருப்பதி இடையே பயணித்ததா என்பது கண்டுபிடிக்கப்படும் என்றார்.
இதில் விதி மீறல்கள் இருந்தால் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் நிபந்தனைகளின் படி, திருமலை திருப்பதி இடையே வாகனங்களை இயக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
குறிப்பாக இந்த நிபந்தனை திருமலை திருப்பதி இடையே இயக்கப்படும் அரசு பேருந்துகளுக்கு பொருந்தும் என்றும் திருப்பதி மலையில் இருந்து பக்தர்களின் காணிக்கை பணத்தை திருப்பதிக்கு எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கும் குண்டு துளைக்காத கண்ணாடிகள் பொருத்தப்பட உள்ளன என்றும் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் ஏழுமலையானை தினமும் சரசாரியாக 70,000 பக்தர்கள் வழிபடுகின்றனர். புரட்டாசி மாதத்தில் இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்து தினமும் ஒரு லட்சத்தை வந்து அடையும். புரட்டாசி மாதத்தில் நடைபெறும் கருட சேவை அன்று 3 லட்சத்துக்கும் அதிக பக்தர்களும், ரதசப்தமி அன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் திருப்பதி மலைக்கு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Also see... திருப்பதி லட்டின் சுவாரஸ்யம் நிறைந்த வரலாறு!
மேலும் ஸ்ரீவாரி சேவை என்கிற பெயரிலான தன்னார்வ சேவை திட்டத்தின் மூலம் தினமும் 3,500 பேர் தேவஸ்தான கோவில்களில் சேவை செய்கின்றனர் என்றார். தற்போதைய நிலையில் விஐபி தரிசனம் மூலம் 4,000 முதல் 5,000 பக்தர்களும், சர்வ தரிசனம் மூலம் 25,000 முதல் 45,000 பக்தர்களும், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய பக்தர்களுக்கான முன்னுரிமை தரிசனம் மூலம் தினமும் 2,000 பக்தர்களும், 300 ரூபாய் தரிசன மூலம் சுமார் 40,000 பக்தர்களும் தினமும் ஏழுமலையானை வழிபடுகின்றனர்.
இதில் அதிகாலை 3:00 மணிக்கு சுப்ரபாத சேவைக்காக ஏழுமலையான் கோவில் திறக்கப்படுகிறது. பின்னர் நள்ளிரவு 1:30 மணிக்கு பின் கோவில் நடை அடைக்கப்படுகிறது. இதனால் இறைவனுக்கு நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே ஓய்வு கிடைக்கிறது என்றும் அவர் அப்போது கூறினார்.
செய்தியளார்: புஷ்பராஜ். உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.